உலகில்  பல்வேறு நாடுகளிலும் சமூக ஊடகங்களான முகப்புத்தகம், டுவிட்டர் என்பனவே இன்று அதிகம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் பாரம்பரிய ஊடகங்களான செய்தித்தாள்கள் பாரிய சவாலை எதிர்நோக்கி வருவது புதிய விடயமல்ல. இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் பின்னணியில் அதிக அளவிலான விளம்பரங்களும் இன்று சமூக ஊடகங்கள் சார்ந்தே செல்கின்றன.

குறிப்பாக கடந்த  ஜனாதிபதி தேர்தலின் போது இதனை நன்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கு பிரதான காரணம் தேர்தல் போன்ற சமயங்களில் இறுதி நேரம் வரை சமூக ஊடகங்களில் விளம்பரங்களைக் காணலாம்.

குறிப்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் யாவும் நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார் .

இதற்கமைய பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தேர்தல் தொடர்பான செய்திகள்  மற்றும் விளம்பரங்களை ஞாயிற்றுக்கிழமையுடன்  நிறுத்திவிடும்.

ஆனால் சமுக உஊடகங்களில் இவை பிரசுரமாகலாம். சமூக ஊடகங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாத சூழ்நிலையே காணப்படுகின்றது. உண்மையைக் கூறப்போனால் சமூக ஊடகங்கள் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத நிலைமையே தொடர்கின்றது. 

இதன் காரணமாகவே கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட வன் செயல்களின் போது சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துச் சுதந்திரத்தை சமூக ஊடகங்கள்  தவறான வழியில் பயன்படுத்துகின்றன என்ற பரவலான கருத்துக்களையும் காணக்கூடியதாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும் .அவ்வாறு தொடரும் பட்சத்தில் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய கட்டாயம் கூட ஏற்படலாம்.

குறிப்பாக சமூக ஊடகங்களை ஓர் நெறி முறையின் கீழ் கொண்டு வரவும் மக்கள் தவறாக  வழி நடத்தப்படாமல் இருக்கவும் துருக்கி அரசு புதிய சட்டமூலம் ஒன்றை கடந்த புதன்கிழமை கொண்டுவந்துள்ளது. இதனை  மீறுவோர் பெருமளவு தொகையை அபராதமாக செலுத்த வேண்டி இருப்பதுடன் அலைவரிசைகளை  முடக்கவும் முடியும் . மறுபுறம் இது கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகின்றது.

எவ்வாறெனினும் சமூக ஊடகங்கள் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வது அவசியமாகும். வெறுமனே போலி தகவல்கள் மற்றும் போலி செய்திகளை பரப்புவதை முற்றாக நிறுத்திக்கொள்ள வேண்டும் மாறாக போலி செய்திகள் வதந்திகளைப்  பரப்புதல் மூலம் நாட்டில் அமைதியீனங்களுக்கு  வழி வகுக்கக்கூடாது. 

ஒரு சிலர் இதனை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும்  கருதி தமது முகப்புத்தகத்தில் பதிவிடுகின்றனர். இதனால் பாராதூரமான பிரச்சினைகள் எழும்  என்பதை மறந்தே போகக்கூடாது.

மேலும் தேர்தலின்போது மாத்திரமன்றி தேர்தல் முடிந்த கையோடும் சமூக ஊடகங்கள்  மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள முன் வர வேண்டும்.

போலி செய்திகளைப்  பரப்பி நாட்டில் அநாவசியமான நெருக்கடிகளை எவருக்கும் உருவாக்கக் கூடாது என்பதை மிகுந்த மனிதாபிமானத்துடன் எடுத்துக் கூற விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்