அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து (யூ.எஸ். ஓப்பன்) பெண்களுக்கான டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திலுள்ள அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் நடத்தப்படவில்லை. இதனால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இன்னொரு பக்கம் அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் வீரர், வீராங்கனைகள் ஒருவித கலக்கத்தில் உள்ளனர். ரசிகர்களின்றி கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து விலகுவதாக ஆஷ்லி பார்ட்டி அறிவித்துள்ளார்.

பிரெஞ்சு பகிரங்க சம்பியனான 24 வயதான ஆஷ்லி பார்ட்டி இது குறித்து  கூறுகையில்,

நானும், எனது அணியினரும் சின்சினாட்டி ஓப்பன் மற்றும் அமெரிக்க ஓப்பன் போட்டிக்காக இம்முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். அமெரிக்க ஓப்பன் மற்றும் சின்சினாட்டி இரண்டும் எனக்கு பிடித்தமான போட்டிகள். ஆனால் கொரோனா காரணமாக அங்கு சென்று விளையாடுவதில் குறிப்பிடத்தக்க அபாயம் இன்னும் உள்ளது. இதனால் வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு அமெரிக்க ஓப்பனில் விளையாடுவதை எதிர்நோக்கி உள்ளேன். செப்டம்பர் மாதம் நடக்கும் பிரெஞ்ச் ஓப்பனில் கலந்து கொள்வது குறித்து இனி வரும் வாரங்களில் முடிவு செய்வேன்’ என்றார்.

ஏற்கனவே விம்பிள்டன் சம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு அமெரிக்க ஓப்பன் சம்பியன் பியான்கா ஆன்ட்ரீஸ்க் (கனடா) ஆகியோரும் அமெரிக்க ஓப்பனில் இருந்து பின்வாங்கி விட்டனர்.

இதேவேளை,  முதலில் தயக்கம் காட்டிய நோவக் ஜோகோவிச்,  ரபாயேல் நடால், டொமினிக்  தியெம், அலெக்சாண்டர் ஸ்வெரேவ், சிட்சிபாஸ் , டேனில் மெட்விடேவ்  உள்ளிட்டோர் அமெரிக்க ஓப்பனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சின்சினாட்டி ஓப்பனில் விளையாட இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அமெரிக்க ஓப்பனிலும்  விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முன்னாள் சம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா அமெரிக்க ஓப்பனில் களமிறங்க இருப்பதாக அவரது குழுவினர் தரப்பு தெரிவித்துள்ளது.