(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் கடந்த 44 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசேட சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஒரு இலட்சத்து 3698 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கமைய கடந்த மாதம் 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை ஆறு மணிமுதல் நேற்று வியாழக்கிழமை காலை ஆறு மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும், பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 24 ஆயிரத்து 412 சந்தேக நபர்களுள் 13 ஆயிரத்து 346 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 17 கிலோ 42 கிராம் 737 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளுடன் 9333 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 787 கிலோ 773 கிராம் 385 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 733 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ 456 கிராம் 534 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 21ஆயிரத்து 397 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 5 இலட்சத்து 36 Nயிரத்து 709 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வெத்திருந்தமை தொடர்பில் 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,ஆயுதங்கள் வைத்திருந்ததாக 235 பேரும் , வெடிமருந்துகளை வைத்திருந்ததாக 20 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 30 குழல் 12 ரக துப்பாக்கிகளும் , 33 உள்நாட்டு துப்பாக்கிகளும் , 125 ரிபிடர் ரக துப்பாக்கிகளும், 2 வேறுவகை துப்பாக்கிகளும், 8 கைத்துப்பாக்கிகளும் , 14 ரி 56 ரக துப்பாக்கிகளும் , ரி 81 ரக துப்பாக்கி ஒன்றும் , ரிவோல்டர் ரக துப்பாக்கிகள் இரண்டும் ,  1808 தன்னியக்க தோட்டாக்களும் மற்றும் 12 வாள்களும் , 9 கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை  367 கிராம் தொகை வெடி மருந்து , 28 டெட்டனேட்டர்கள் மற்றும் 36 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 20,384 சந்தேக நபர்களும்,  வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 38250 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதன் நோக்கிலே பொலிஸார் இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய கடந்த 44 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சுற்றிவளைப்புகளின் போது  ஒரு இலட்சத்து 3698 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.