(நா.தனுஜா)

கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, அதனை முற்றாக இல்லாதொழிப்பதில் இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது.

சீனத்தூதரகமும், 'பாத் ஃபைன்டர் பவுண்டேஷன்' அமைப்பும் ஒன்றிணைந்து நேற்று வியாழக்கிழமை 'கொவிட் - 19 கட்டுப்பாடு மற்றும் தடுப்பு' என்ற நூலின் சிங்கள மொழிபெயர்ப்பை வெளியிட்டு வைத்தன. இது ஷங்காய் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் குழுமத்தின் தலைவர் பேராசிரியர் சாங் வெஹொங்கினால் திருத்தப்பட்ட, உலகறிந்த மிகவும் பிரபலமான நூலாகும்.

இந்த சிங்கள மொழிபெயர்ப்பு நூலின் முதற்பிரதி சீனத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி ஹு வே மற்றும் பாத் ஃபைன்டர் பவுண்டேஷன் அமைப்பின் முன்னாள் பணிப்பாளர் லக்ஷ்மன் சிறிவர்தன ஆகியோரால் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்திய கலாநிதி லக்ஷ்மி சோமதுங்க மற்றும் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் அனுஷா பெர்னாண்டோ ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது 'கொவிட் - 19 கட்டுப்பாடு மற்றும் தடுப்பு' என்ற நூலை மொழி பெயர்ப்பதற்கான பதிப்புரிமையை இலவசமாக வழங்கிய சீனப் பங்காளர்களுக்கு நன்றி தெரிவித்த லக்ஷ்மன் சிறிவர்தன, கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பின்னர் இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கை மற்றும் சீன நாடுகளின் சுகாதாரத் திணைக்களங்களுக்கு இடையில் நீண்டகாலமாகப் பேணப்பட்டுவரும் இணக்கப்பாடு மற்றும் அண்மைக்காலமாக சீனாவினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் மருத்துவ உதவிகள், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அனுபவப்பகிர்வு ஆகியவை பெரிதும் வரவேற்கப்பட வேண்டியவையாகும் என்று சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஹு வே, 'கொவிட் - 19 கட்டுப்பாடு மற்றும் தடுப்பு' என்ற நூலை சிங்களத்தில் மொழிபெயர்ப்பதற்கு பாத் ஃபைன்டர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார். அத்தோடு இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, அதனை முற்றாக இல்லாதொழிப்பதில் சீனா இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகக் கூறியதுடன், நாட்டிலுள்ள மருத்துவ சேவையாளர்களுக்கு வழங்கத்தக்க விதமாக இந்த நூலின் 8000 பிரதிகளை அச்சிடுவதற்கான முன்மொழிவொன்றையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.