(நா.தனுஜா)

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல் மிகவும் தீர்மானம்மிக்க தேர்தலொன்றாகும். ஏனெனில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரிடத்திலும் பாராளுமன்றத்தின் வசமுமே அதிகளவான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. எனவே யார் பிரதமர் என்பதையும், பாராளுமன்றத்திற்குச் செல்பவர்கள் யார் என்பதையும் தீர்மானிக்கப்போகின்ற இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம், சமூக விவகாரங்கள், மாணவர்களின் கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மீண்டும் சீரமைத்து முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல வேண்டிய தேவையிருக்கின்ற நிலையில் அதனைச்செய்யும் ஆற்றலுடைய சிறந்த தலைவரைத் தெரிவுசெய்வதற்காக மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டப் பொதுத்தேர்தல் வேட்பாளர் கனிஷ்க சேனாநாயக்க வலியுறுத்தினார்.

இளந்தலைமுறையிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்திருக்கும் கனிஷ்க, தனது அரசியல் பிரவேசத்தின் நோக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் பற்றி கேசரிக்கு வழங்கிய நேர்காணலில் பகிர்ந்துகொண்டார். 

அவருடனான நேர்காணலில் முழுவடிவம் வருமாறு:

கேள்வி : இன்றளவில் பெரும்பாலான இளைஞர், யுவதிகள் நாட்டில் நிலவும் அரசியல் கலாசாரத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் கடும் அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் இளைஞர் என்ற வகையில் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு நீங்கள் ஏன் தீர்மானித்தீர்கள்? அரசியல் பிரவேசத்தின் ஊடாக நீங்கள் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : ஆம், நீங்கள் கூறியதுபோன்று இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் நான் அரசியலுக்குள் பிரவேசித்தேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரினாலும் எவ்வித பயனுமில்லை என்றே நாட்டின் இளைஞர், யுவதிகள் கருதுகின்றார்கள். அவ்வாறிருக்கையில் இளைஞர்களாகிய நாம் அரசியலுக்குள் நுழைந்து, தற்போதைய அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முற்படாமல் வெறுமனே அதனைக் குறைகூறுவதில் மாத்திரம் பயனில்லை. எமது நாட்டின் அரசியலைப் பொறுத்தவரையில் பலகாலமாகப் பழக்கப்பட்ட முகங்கள்தான் தொடர்ந்தும் இந்தத் துறையில் இருந்துகொண்டேயிருக்கிறார்கள். மாறாக இளைஞர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்காக சரியான விதத்தில் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை முன்நிறுத்தி அரசியலுக்குள் பிரவேசிப்பவர்கள் மிகவும் குறைந்தளவானோரேயாவர். எனவேதான் இளைஞர், யுவதிகளுக்கு அரசியலின்பால் அதிருப்தி ஏற்பட்டிருக்கும் என்று நான் கருதுகின்றேன்.

ஆகவே இளைய தலைமுறையின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே நான் ஓர் இளைஞர் என்ற வகையில் அரசியலில் ஈடுபட முன்வந்திருப்பதுடன், அதனூடாக மேலும் பல இளைஞர் யுவதிகளை அரசியலுக்குள் உள்ளீர்க்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இளந்தலைமுறையினர் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலும் அத்தகைய நிலையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படையை கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி : உங்களுடைய அரசியல் பிரவேசத்தில் உங்களது தாயார் ரோஸி சேனாநாயக்கவின் பங்களிப்பு எத்தகையதாக இருந்திருக்கிறது?

பதில் : உண்மையில் இப்போது அவரால் எனது அரசியல் பயணத்தில் எவ்வகையிலும் இணையவோ அல்லது ஒத்துழைப்பு வழங்கவோ முடியாது. ஏனெனில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலேயே கொழும்பு மாநகரசபையின் மேயராக கடமையாற்றிக்கொண்டிருக்கிறார். ஆகவே எனது அரசியல் பிரசார செயற்பாடுகளுக்கு உதவவோ அல்லது வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ அவரால் முடியாது. ஆனாலும் எனது செயற்பாடுகள் தொடர்பில் நானே சுயாதீனமாகத் தீர்மானமெடுப்பதற்கு அவர் அனுமதித்திருக்கிறார். நான் எந்தக் கட்சியில் இணையவேண்டும் என்று அவர் எப்போதும் குறிப்பிட்டதில்லை. 

எனவேதான் நான் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தீர்மானித்தேன். எனது தாயார் என்னுடைய தேர்தல் பிரசார செயற்பாடுகளில் உடனில்லாவிடினும், அவர் எப்போதும் என்னுடைய பலமாக இருந்து வந்திருக்கிறார்.

கேள்வி : உங்களுடைய தாயார் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற போது நீங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து சஜித் பிரேமதாஸவுடன் உங்களுடைய அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்தமைக்கான காரணம் என்ன?

பதில் : நீண்டகாலத்திற்கு ஒரு சிறந்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. மக்களுக்காக சேவையாற்றக்கூடிய அரசியலை செய்யவே விரும்புகின்றேன். அதற்கு தூய்மையான அரசியல் தலைவரொருவருடன் இணையவேண்டும் என்பதுடன், நானறிந்த வரையில் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களிலும் சஜித் பிரேமதாஸ மிகவும் சிறந்த, தூய்மையான தலைவராவார். ஆகையினாலேயே நான் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து எனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தேன்.

கேள்வி : தற்போது ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவடைந்திருக்கிறது. இதனால் கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளும் இரண்டாகப் பிரியும் நிலை ஏற்படுமல்லவா? அவ்வாறானதொரு சூழ்நிலையில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் உங்களால் வெற்றியடைய முடியும் என்று கருதுகின்றீர்களா?

பதில் : நிச்சயமாக எம்மால் வெற்றிபெற முடியும். முதலில் ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டிருப்பது பிளவு அல்ல. ஏனெனில் ஆரம்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் ஆலோசனைக்கு அமைவாகவே ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கூட்டணிக்கட்சியாக ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் தலைவராக சஜித் பிரேமதாஸவும், பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னரேயே ஐக்கிய தேசியக் கட்சியின் குறித்த சில உறுப்பினர்கள் தாம் தனித்துப்போட்டியிடுவதென்று தீர்மானித்தனர். அதேவேளை தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் பெருமளவானோர் சஜித் பிரேமதாஸவின் பக்கமே உள்ளனர். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அநேக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் சஜித் பிரேமதாஸவுடனேயே இருக்கின்றனர். ஆகவே இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இம்முறைத் தேர்தலில் எம்மால் நிச்சயமாக வெற்றியடைய முடியும். ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போதுள்ள மிகச்சொற்பமானோருக்கு வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக நான் கருதவில்லை.

கேள்வி : ஓர் இளைஞர் என்ற வகையில் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கான பிரச்சினைகளென நீங்கள் எவற்றை இனங்கண்டிருக்கிறீர்கள்? அவற்றுக்கான தீர்வுகள் என்ன?

பதில் : இன்றளவில் இளைஞர்கள் எதிர்கொண்டிருக்கும் முதன்மையான பிரச்சினை வேலையின்மையுடன் தொடர்புபட்டதாகும். வேலையின்மைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான செயற்திட்டங்களை நாம் வகுத்திருக்கின்றோம். தற்போது அரசாங்கத்தினால் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்கள் போதுமானதாக இல்லை. ஆனால் உண்மையில் இப்பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இதற்கு தீர்வுகாண்பதற்கு தனியார் துறையினருடன் இணைந்து செயலாற்றத்தக்க கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று வெளிநாடுகளிலிருந்து நிறுவனங்கள் நாட்டில் முதலீடுகளை செய்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அடுத்ததாக அண்மைக்காலங்களில் சமூகவலைத்தளங்கள் பாரிய வணிக முயற்சியாண்மைக்கான களமாக மாறிவருகின்றன. அவைபற்றிய விழிப்புணர்வு இளம் சமுதாயத்தின் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு, புதிய வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

கேள்வி : தமிழர் அரசியல் பிரச்சினை மற்றும் அவர்களுடைய வாழ்வியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினைப் பெற்றக்கொடுப்பது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் : அரசாங்கம் என்ற வகையில் இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளையும் எவ்வித இன, மத, மொழி வேறுபாடுகளுமின்றிப் பாதுகாக்க வேண்டும். அனைத்து மக்களினதும் உரிமைகள் சமனானவையாகும். அவற்றை அனைவருக்கும் உரியவாறு பெற்றுக்கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அதே நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் இருக்கின்றார்.

அதேபோன்று நாட்டை முன்னேற்றுவதற்கு நாம் கொண்டிருக்கின்ற செயற்திட்டத்தின் அடிப்படையிலேயே மக்களின் வாக்குகளை சேகரிக்க வேண்டும். மாறாக இனவாதத்தையும் மதவாதத்தையும் பிரசாரமேடைகளில் விதைத்து, அவற்றினூடாக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதென்பது மிகவும் மோசமானதும், கண்டிக்கப்பட வேண்டியதுமான விடயமாகும்.

ஆக, எதிர்வரும் பொதுத்தேர்தல் மிகவும் தீர்மானம் மிக்க தேர்தலொன்றாகும். ஏனெனில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின்படி பிரதமரிடத்திலும், பாராளுமன்றத்தின் வசமுமே அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில் யார் பிரதமர் என்பதையும், பாராளுமன்றத்திற்குச் செல்பவர்கள் யார் என்பதையும் தீர்மானிக்கப்போகின்ற இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் நாட்டின் பொருளாதாரம், சமூக விவகாரங்கள், மாணவர்களின் கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மீண்டும் சீரமைத்து முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல வேண்டிய தேவையிருக்கிறது. 

அதனைச் செய்வதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியும். எனவே இம்முறை அனைத்து மக்களும் நிச்சயமாகத் தமது வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், தமக்காக சேவையாற்றக்கூடிய சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் நாட்டுமக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.