(செ.தேன்மொழி)

அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கோரிக்கையால் நாட்டின் ஜனநாயகக் கொள்கைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. 

அதனால் மக்கள் ஆழ்ந்து சிந்தித்தே இம்முறை வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுதத் ஜயசுந்தர, ஜனநாயகத்தின் படி செயற்படும் கட்சியில் தாம் இணைந்து கொண்டிருப்பதால், இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமாக ஆட்சியை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

வீரகேசரிக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது செவ்வியின் முழுவிபரம் வருமாறு,

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுப்பட்டுள்ள நிலையில் உங்களால் வெற்றிப் பெறமுடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா?

கட்டாயம் நாங்கள் வெற்றிப் பெருவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. ஏன் என்றால் ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் சிலரே பிரிந்து சென்றுள்ளனர்.

இதனால் கட்சியின் வெற்றிக்கு அது பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் எண்ணவில்லை. கட்சியின் சின்னம், மற்றும் அதற்குறிய நிறம் என்பவற்றில் மாற்றம் ஏற்படவில்லை.

யானை சின்னத்திற்கென்று தனியான வரவேற்பு இருக்கின்றது. ஐ.தே.க. பழமைவாய்ந்த கட்சி இந்நிலையில் அதற்கென்றே தனியான ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.

இதேவேளை, யானை சின்னத்திற்கும், பச்சை நிறத்திற்கும் தங்களது உயிரையும் தியாகம் செய்வதாக குறிப்பிடக்கூடிய ஆதரவாளர்கள் ஒருபோதும் கட்சியை விட்டு பிரிந்துச் செல்ல மாட்டார்கள்.

அவர்கள் இன்னமும் கட்சியுடனேயே இணைந்துச் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்கு முன்னரும் ஐ.தே.க.வை விட்டு பலர் பிறிந்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் யாராளும் கட்சிக்கு போட்டியாக வரமுடியவில்லை. பிறிந்து சென்ற சிலர் மீண்டும் கட்சியில் இணைந்துக் கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றது.

தப்போது கட்சியை விட்டு பிரிந்து சென்று தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கும் இந்த நிலைமை ஏற்படலாம்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி என்பது புதிய கட்சியாகும். இவர்களது கொள்கை தொடர்பில் எமக்கு பெரியதொரு விளக்கமில்லை. இவர்கள் இனவாதத்தையோ, அல்லது மதவாதத்தையோ முதன்மை படுத்தி அவர்களது செயற்பாடுகளை முன்னெடுக்கவும் வாய்ப்புள்ளது.

ஆனால் ஐ.தே.க. எப்போதுமே ஜனநாயக பண்பு மிக்க ஆட்சியையே முன்னெடுத்து வருகின்றது.

கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது உங்கள் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?

இல்லை, அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் அவை எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை. 

அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அவர் ஒரு குற்றவாளி என எம்மால் கூறமுடியாது.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் எமது கட்சியின் சில உறுப்பினர்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவர்களுக்கு எதிராக  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எதுவுமே இன்னும் உறுதிப்படுத்தப்பட வில்லை.

இதேவேளை, அவை தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த உறுதியற்ற குற்றச்சாட்டுகள் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறமுடியாது.

கொழும்புவாழ் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எவ்வாறான சேவையை மேற்கொள்ள எதிர்பார்த்திருக்கின்றீர்கள்?

கொழும்பை பொருத்த மட்டில் சிங்களம், தமிழ், முஸ்லீம் மற்றும் கத்தோலிக்க மக்கள் செறிவாக வாழ்கின்றனர். இந்நிலையில் தமிழ், முஸ்லீம் மக்கள் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தாமல், கொழும்பு வாழ் அனைத்தின மக்களுக்கும் ஒரே வகையான சேவையை வழங்கவே எதிர்பார்த்திருக்கின்றேன்.

முதலாவது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து.  இதேவேளை, இப்பகுதி மக்களின் பெருந் தொகையானோர் போதியளவான அடிப்படை வசதிகள் இன்றி பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இது போன்று விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருக்கின்றேன்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி எப்போதுமே ஜனநாயகக் கொள்கையில் செயற்பட்டு வரும் கட்சி என்ற வகையில், அனைவருக்கும் சமவுரிமை வழங்கும் வகையிலான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதே எனது நோக்கமாகும். அதற்கமைய நான் செயற்பட எதிர்பார்த்திருக்கின்றேன்.

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஏதாவது திட்டம் இருக்கின்றதா?

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு பின்னர் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது.

இந்நிலையில், சுயதொழிலாளர்கள் பலர் அவர்களது வங்கி கடன்களை செலுத்த முடியாமல் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இவர்களின் கடன்களை மீறச் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்பட்டுள்ள போதிலும், அது அவர்களின் பிரச்சினையை தீர்பதற்கு போதுமானதாக இல்லை.

இதேவேளை இவர்கள் மீண்டும் தமது உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியாமல் இருக்கின்றனர்.

மேலும் வங்கிக் கடனொன்றை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டாலும், இவர்கள் ஏற்கனவே வங்கியில் கடனை பெற்றுக் கொண்டுள்ளதனால், அவர்களது விபரமும், அவர்களது கடனுக்கு பொறுப்புதாரியாக கைச்சாத்திட்டுள்ளவர்களின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதினால் அது முடியாமல் போயுள்ளது.

அதனால், அவர்களுக்கு நிவாரணப் பணம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாடியுள்ளேன்.

அதற்கமைய எமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்த்திருக்கின்றேன்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இதுவரையிலும் அரசாங்கத்திற்கு பெருந்தொகையான நிவாரண நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆனால், அதற்கு என்ன நடந்தது என்பது இன்னமும் தெளிவுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த நிதிகளை பயன்படுத்திக் கூட பாதிகப்பட்டுள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு எம்மால் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க முடியும்.

ஐ.தே.க.வின் வீழ்ச்சிக்கு காரணமாக நீங்கள் எதனை கருதுகின்றீர்கள்?

கடந்த காலங்களில் ஐ.தே.க. வில் இருந்த சில உறுப்பினர்கள் தேரர்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

இதனால் சிங்கள பௌத்த மக்களிடையே எமக்கு இருந்த வரவேற்பு குறைந்தது. தற்போது அந்த உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு விலகிச்சென்றுள்ளனர்.

அதனால் மீண்டும் சிங்கள பௌத்த மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பிரதான மதமாக பௌத்த மதமே காணப்படுகின்றது. அதற்கமைய பௌத்தமதத்திற்கு முதலிடத்தை வழங்கி ஏனைய மதங்களையும் ஆதரித்து செயற்படுவதுடன், மதபோதனைகளை அதிகளவில் மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும்.

அப்போதுதான் நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயற்பாடுகளை குறைக்கலாம் என்று நான்கருதுகின்றேன்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெருபான்மையை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது. இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?

அரசாங்கம் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவரவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தங்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

இது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த ஆட்சிகளில் நாட்டில் சுயாதீனமாக இயங்க வேண்டிய சட்டத்துறை உள்ளிட்ட துறைகள் அப்போதைய ஆட்சியாளர்களின் விரும்பத்திற்கு இணங்க செயற்பட்டிருந்தது.

இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கத்தில் 19 ஆம் அரசியலமைப்பு திருத்தம் செயற்பட்டது.

அதற்கமைய பல சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.

ஊடகங்கள் சுகந்திரமாக இயங்கின. அனைத்து மக்களுக்கும் தகவலறியும் சட்டத்தின் மூலம் , தகவலறியும் உரிமை வழங்கப்பட்டது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டால் இந்த ஆணைக்குழுக்ள் அனைத்தும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

இதுவரையில் அரச துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பதவிகளுக்கு இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளது.

இதேவேளை, இன்னமும் நாட்டில் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரே இருக்கின்றார். இது ஏன் என்று எனக்கும் புரியவில்லை.

சிலவேளை தேர்தலின் பின்னர் அந்த பதவிக்கும் இராணுவத்தில் ஒருவரை நியமிக்கும் எண்ணத்தில் இருக்கின்றார்களா? என்று தெரியவில்லை.

அதனால் மக்கள் இந்த விடயங்கள் தொடர்பில் நன்கு சிந்தித்தே மக்கள் வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால் நாட்டின் ஜனநாயகத்திற்கு மீண்டும் பாதிப்பு ஏற்படலாம்.