(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) 

மலையகத்தில் தமிழ்மொழி அமுலாக்கப்பட்டமையின்  காரணத்தாலேயே அதிகளவான வழக்குகள்  தேங்கி கிடப்பதாக பதுளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற  உறுப்பினர்  வடிவேல் சுரேஷ்  சபையில்  சுட்டிக்காட்டினார்.  நீதி அமைச்சர் மலையகப் பகுதிகளுக்கு நேரில் வருகை தந்து யதார்த்த நிலைமைகளை ஆராய வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை திருத்தச் சட்டத்தின்  மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ மத்தியஸ்த சபை உட்பட நீதித்துறை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கின்றமையை மலையக மக்கள்  சார்பில் வரவேற்கின்றேன்.  

நீதித்துறை நவீன காலத்துக்கு  ஏற்ற வகையில் மாற்றுவது காலத்தின் கட்டாயமாகும். அதற்கு ஏற்ற வகையில்  இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை சிறப்பானது. 

மலையகத்தைப் பொறுத்தவரையில் அங்குள்ள நீதிமன்றங்களில் ஆயிரக் கணக்கான  வழக்குகள்  தேங்கிக்  கிடக்கின்றன. சிறு சிறு குற்றங்கள் தொடர்பிலான வழக்குகளும் அவ்வாறு தொடர்ச்சியாக தேங்கிய நிலையிலேயே  காணப்படுகின்றது. இதற்கு  மலையகத்தில் தமிழ்  மொழி அமுல்படுத்தப்படாமையே பிரதான காரணமாக காணப்படுகின்றது.  தமிழ் மொழி முறையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால் இவ்வாறு  வழக்கு கிடப்பில்  இருக்கும்  நிலைமைகள் ஏற்பட்டிருக்காது என்பதை  கருதிற் கொள்ள வேண்டும்.