இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனி, ரோஹித் ஷர்மாதான் என இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உப தலைவருமான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நான் ரோஹித் ஷர்மாவின் செயற்பாடுகளை பார்த்து இருக்கிறேன். அவர் மிகவும் அமைதியானவர், மற்றவர்களின் கருத்தை கேட்கக்கூடியவர். சக வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதில் விருப்பம் கொண்டவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தானே முன்னின்று அணியை வழிநடத்துவதை விரும்பக்கூடியவர். அணியை முன்னின்று நடத்துவதுடன், வீரர்களின் ஓய்வறை சூழலுக்கும் மதிப்பு அளிப்பவர். 

அப்படி செயற்படும் போது நீங்கள் எல்லாமும் கிடைத்தது போன்று உணர்வீர்கள். அவர் எல்லோரையுமே அணித்தலைவராக நினைப்பார். அவரது தலைமைத்துவ தன்மையை நான் பார்த்து இருக்கிறேன்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நமது அணி கிண்ணத்தை வென்றபோது அவரது தலைமையின் கீழ் நான் விளையாடியிருக்கிறேன். 

இளம் வீரர்களான ஷர்துல் தாக்கூர், வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு அவர் எந்த அளவுக்கு நம்பிக்கை அளித்தார் என்பதை பார்த்து இருக்கிறேன். 

தோனிக்கு அடுத்து முன்னணி வீரர்களில் ஒருவராக ரோஹித் ஷர்மா விளங்குகிறார். தோனி புத்திசாலியான தலைவர். ஆனால், தோனியையும் விட அதிக ஐ.பி.எல். கிண்ணத்தை ரோஹித் ஷர்மா வென்றுள்ளார்.

இருவருடைய கேப்டன்ஷிப் பண்பும் ஒரே மாதிரி தான் இருக்கும். இருவருமே மற்றவர்களின் கருத்தை கவனிக்கக்கூடியவர்கள். 

உங்கள் தலைவர்கள் மற்றவர்கள் சொல்வதை கவனித்தாலே நிறைய பிரச்சினைகளை தீர்க்க முடியும். அத்துடன் வீரர்களின் மனரீதியான பிரச்சினையை சமாளிக்க முடியும். என்னை பொறுத்தமட்டில் இருவரும் அற்புதமான அணித்தலைவர்கள்” என்றார்.