இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 16 ஆவது அமர்வுக்கான பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியிருக்காது வாக்குச்சாவடிகளுக்கு சென்று தமது வாக்குரிமையை பிரயோகிக்கவேண்டுமென யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழகமும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் சங்கமும் இணைந்து தமிழ் மக்களுக்கு ஒரு அறைகூவலை விடுக்கின்றது.

சர்வதேச அரசியல் வரலாற்றையும், மனித உரிமைகள் சட்டத்தின் வளர்ச்சியையும் ஆராயும் போது மக்கள் புரட்சிகள் உருவாகுவதற்கு காரணமானதும், மக்கள் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் வாக்குரிமையே அதீத செல்வாக்குச் செலுத்தியுள்ளது.

பிரான்சிய புரட்சி மற்றும் அமெரிக்க சுதந்திர பிரகடனங்களிலே உள்ள ஒரு முக்கியமான மக்களினுடைய இறைமையுடன் பின்னிப்பிணைந்ததான ஒரு உரிமையாக வாக்குரிமை அங்கிகரிக்கப்பட்டு இருக்கின்றது. எமது கிறிஸ்தவ சட்ட கோட்பாடுகளும் எமது திரு அவையும் வாக்குரிமையை ஒவ்வொருவரும் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்பதில் கூடிய அக்கறையையும் ஆர்வத்தையும் தொடர்ச்சியாக காட்டிவருகின்றது. 

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இறைமை என்பது மக்களிடத்திலிருக்கின்றது. அந்த இறைமை பாராதீனப்படுத்தமுடியாததாக காணப்படுகின்றது. (Sovereignty is in the people and it is inalienable) இதனை இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 3 எடுத்துரைக்கின்றது. இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 4 இல் மக்களின் இறைமை பிரயோகிக்கப்படும் முறைமைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதிலே இரண்டு சந்தர்ப்பங்களில் மக்களின் இறைமை நேரடியாக மக்களினாலும் மற்றைய மூன்று சந்தர்ப்பங்களில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களாலும் பிரயோகிக்கப்படுகின்றது. அதாவது மக்களினுடைய சட்டவாக்கத்துறை அதிகாரம் பாராளுமன்றத்தினாலும் மற்றும் ஏனைய துணைச் சட்டவாக்க சபைகளாலும் (மாகாணசபைகளினாலும்) மக்களினுடைய நிறைவேற்றுத்துறை அதிகாரம் ஜனாதிபதியினாலும் அவரின் கீழுள்ள அமைச்சரவையாலும் மக்களுடைய நீதித்துறை அதிகாரம் நீதிமன்றங்களினூடாக பாராளுமன்றத்தினாலும் பிரயோகிக்கப்படுகின்றது. ஆனால் மக்களுடைய இறைமையானது நேரடியாக மக்கள் தமது வாக்குரிமையை பிரயோகிக்கின்றப்பொழுதும், மக்களது அடிப்படை உரிமைகளினை அனுபவிக்கும்போதுமே பிரயோகிக்கப்படுகின்றது. 

மக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டிய விடயம் என்னவெனில், உங்களின் இறைமை நேரடியாக பிரயோகிக்கப்படும் ஒரேயொரு சந்தர்ப்பம் இவ்வாக்குரிமை ஆகும். மேலே கூறப்பட்ட சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை அதிகாரங்களை பிரயோகிக்க காலத்துக்குகாலம் பல்வேறு தேர்தல்கள் ஊடாக உங்கள் வாக்குரிமையினால் நீங்கள் பிரதிநிதிகளை  தெரிவுசெய்கின்றீர்கள்.

இதன் பிரகாரம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் உங்களின் நிறைவேற்றுத்துறை அதிகாரத்திற்கான இறைமையினை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததன் மூலம் பிரயோகித்திருந்தீர்கள். இங்கு பொதுவாக பெரும்பான்மை ஜனநாயகமே மக்கள் தீர்ப்பாக அங்கீகரிக்கப்படுகின்றது என்பதனை உணர்ந்தும் இருப்பீர்கள். 

இதேபோல உங்கள் சட்டவாக்க அதிகாரத்தை பிரயோகிப்பதற்கான பாராளுமன்றத் தேர்தலிலே உங்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலையே வரவிருக்கும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி மக்களாகிய நீங்கள் பிரயோகிக்க இருக்கின்றீர்கள்.

ஒரு ஜனநாயக அரசியல் முறைமையில் மக்கள் தம்முடைய விருப்பு வெறுப்புகள் மற்றும் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய பிரதிநிதிகளையே தெரிவுசெய்ய வேண்டும். ஏனெனில், இறைமை மக்களிடமே இருக்கின்றது, மக்கள் பிரதிநிதிகளிடம் இல்லை என்பதை உணர்த்துவதே தேர்தல் களம். மக்களால் கொடுக்கப்பட்ட ஆணையை நிறைவேற்றவே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றார்கள்.

அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது மக்களின் உரிமைகள் மற்றும் நலனுக்காக போராடுபவர்களாகவும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான ஒப்பந்தம். இதனையே அரசியல் விஞ்ஞானத்தில் சமூக ஒப்பந்தம் என்று அழைப்பார்கள். ஒருமுறை மக்கள் பிரதிநிதியாக ஒருவரைச் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துவிட்டால் அவரின் இறப்பு தவிர அக்குறித்த நபர் பாராளுமன்ற உறுப்பினராக 5 வருடங்கள் தொடர்ந்தும் இருப்பார்.

இலங்கையிலே பாhளுமன்ற உறுப்பினர்களை அவர்கள் பதவியில் உள்ள போது அவர்கள் மக்களின் ஆணையை நிறைவேற்றாத சந்தர்ப்பங்களில் மக்கள் பிரதிநிதிகளை மீளழைக்கும் (Right to Re-call)  அதிகாரம் அரசியலமைப்பால் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே ஒருவரை பதவி நீக்கம் செய்யவேண்டின் அடுத்த பாராளுமன்ற தேர்தல்வரை மக்கள் காத்திருக்கவேண்டும். இவர்களுக்கு வாக்களித்து எமக்கு என்ன பயன் கிடைத்தது அல்லது கிடைக்கப்போகின்றது என எண்ணி மனம் சலித்தவர்களாய் இராமல் உங்கள் வாக்குரிமையை நிலை நாட்டிட நீங்கள் முன்வர வேண்டும்.

இன்று வடக்கு கிழக்கு தமிழ் மக்களினுடைய அரசியல் தேர்தல் களத்திலே பல கட்சிகள் பல கொள்கைகளோடு தமக்கு வாக்களிக்குமாறு மக்களை கோருகின்றார்கள். இவ் அரசியல் கட்சிகள் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளாகவும், பெரும்பான்மை தேசிய சிந்தனைகளைக் கொண்ட கட்சிகளாகவும், தமிழ் தேசியத்தை விட அபிவிருத்தியே சிறந்தது எனக்கூறும் கட்சிகளாகவும்; இம்முறை தேர்தலிலே களம் இறங்கியுள்ளன. இதனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் சிதறப்பட போகின்றது என்ற கவலை தமிழ் மக்கள் மத்தியிலே ஒருவிதமான பயத்தையும் சிந்தனையையும் உருவாக்கி இருந்தாலும் ஜனநாயகத்திலே ஒவ்வொரு கொள்கைக்கும் மாற்றுக்கொள்கைகளும் மாற்றுக்கருத்துக்களும் இருக்கவே செய்கின்றன. 

இந்நிலையிலே அமெரிக்க எழுத்தாளரும் கவிஞருமான Josiah Gilbert Holland  என்பவருடைய புகழ் பூத்த ஆங்கில கவிதையில் தேர்தலில் மக்கள் எப்படியான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அழகாக கூறுவதனால் அதன் தமிழாக்கத்தை உங்களுடன் பகிரலாம் என விரும்புகின்றோம்.

“இறைவா! எங்களுக்கு மனிதர்களைத் தா

 வலிமையான மனம், சிறந்த இதயம்

 உண்மையான விசுவாசம்இ தயாரான கரங்கள்;;; 

 கொண்ட மனிதர்களையே இந்த காலகட்டம்

 வேண்டி நிற்கின்றது.

 அவர்கள் பதவி மோகத்தால் கொல்லப்படாதவர்கள்;

 இலஞ்சத்திற்கு விலை போகாதவர்கள்;;

 நிலையான கருத்துக்களையும், மன உறுதியையும் தம்மகத்தே கொண்டவர்கள்; 

 அவர்கள் சுய கௌரவம் உள்ளவர்கள்;   

 பொய் பேசாதவர்கள் 

 போலி அரசியல்வாதி முன் நின்று 

 அவரது துரோக முகஸ்துதிகளை கண் சிமிட்டாமல் கண்டிக்கக் கூடியவர்கள்!

 பொது கடமையிலும் சரி தனிப்பட்ட சிந்தனையிலும் சரி;

 உயர்ந்தவர்களாக சூரிய மகுடம் சூடியவர்களாக மூடு பனிக்கு அப்பால் வாழ்பவர்கள்

 அதிகம் பேசி சிறிதளவே சாதிக்கும் சாமானியர்கள்

 சுயநலத்துடன் மோதிக்கொள்ள அதோ! சுதந்திரம் அழுகின்றது, 

 தவறு நாட்டை ஆழ்கின்றது காத்திருக்கும் நீதி தூங்குகின்றது.”

ஆகையால் இறைமையுள்ள மக்களும் பொறுப்பான குடிமக்களுமான நீங்கள் சிறந்த பொறுப்புக்கூற கூடிய, மக்களுக்கு பதிலளிக்க கூடிய உண்மையான நேர்மையான தகுதிவாய்ந்த வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உங்கள் வாக்கினை அளிப்பது காலத்தின் தேவையாகும். 

எனவே மக்களாகிய நீங்கள் அனைவரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி விடிந்தவுடன் உலகை அச்சுறுத்தும் கோவிட் 19 வைரசின் பரவலை தடுக்கக் கூடிய சுகாதாரமுறைமைகளை பின்பற்றி வாக்களித்து உங்களுடைய ஜனநாயக உரிமையை நிலைநாட்டுமாறு யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழகமும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க சட்டத்தரணிகள் சங்கமும் கூட்டாக அழைப்பு விடுக்கின்றனர்.