(இராஜதுரை ஹஷான்)

ரணில் மற்றும் சஜித் ஆகியோருக்கு இடையிலான முரண்பாட்டினால் அரசியலில் தனித்து விடப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்ளலாம். நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றம் பயனற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் ரீதியில் ஐக்கிய தேசிய கட்சி பலவீனமடைந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சியை தனது அரசியல் சுயநலத்துக்காக பிளவுப்படுத்தினார்.  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தாரளமாக இணைந்துக்கொள்ளலாம்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டத்தை  பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலில்  கிடைக்கப் பெற்ற பொதுத்தேர்தலின் ஊடாகவே முழுமைப் பெறும் ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பலமான அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் இரு வேறுப்பட்ட கட்சிகளை ஒன்றினைத்து உருவாக்கப்பட்டது. இரு தரப்பினரும் கொள்கை ரீதியில் வேறுப்பட்டவர்கள். அதனால் அரசாங்கத்தின் கொள்கையும் வேறுப்பட்டு  முரண்பாட்டை தோற்றுவித்தது.  இறுதியில் நல்லாட்சி அரசாங்கம் தோற்றம்பெற்றது. பயனற்றது என்ற நிலைமை உருவானது. இவ்வாறான நிலை இனி ஏற்பட கூடாது.

பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியலமைப்புசார் சிக்கல் நிலை ஆகியவற்றுக்கு தீர்வு காண வேண்டுமாயின்  பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க வேண்டும். முரண்பாடுகளுக்கு மத்தியில் அரசாங்கம் தோற்றம் பெற்றால் நல்லாட்சி அரசாங்கத்தின் தன்மைகளே மீண்டும் தோற்றம் பெறும் என்றார்.