மென்செஸ்டரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கிரேய்க் பிரெத்வெய்ட்டின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுக்கள் என்ற மைல் கல்லை எட்டினார்.

Stuart Broad reaches 500 wickets in Tests, shatters records for ...

இங்கிலாந்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரர்களாக ஜேம்ஸ் அண்டர்சன், ஸ்டுவர்ட் பிரோட் ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டுவர்ட் பிரோட் நீக்கப்பட்டிருந்தார். இதனால் கடும் விமர்சனம் எழும்பியது. இங்கிலாந்து அணியும் தோல்வியடைந்தது.

இதனால் இரண்டாவது போட்டியில் இணைக்கப்பட்டார். ஸ்டுவர்ட் பிரோட் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இவரின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் பென் ஸ்டோக்ஸின் துடுப்பாட்டத்தினாலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் மென்செஸ்டர் ஓல்ட் டிரபோர்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஸ்டுவர்ட் பிரோட் 6 விக்கெட்டுக்களை  வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்ததுடன், போட்டியின் 4 ஆவது நாள் ஆட்டம் மழையால் இரத்தானது.

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் ஆரம்பமானது. மேற்கிந்தியத் தீவுகள் அணி துடுப்பாட்ட வீரரான கிரேய்க் பிரெத்வெய்ட் 19  ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டுவர்ட் பிரோட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட் மூலம் ஸ்டுவர்ட் பிரோட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் 500 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது ஸ்டுவர்ட் பிரோட் இந்த மைல் கல்லை எட்டிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஜேம்ஸ் அண்டர்சன் 129 ஆவது டெஸ்டில் இந்த சாதனையை எட்டிய நிலையில் ஸ்டுவர்ட் பிரோட் 140 ஆவது  போட்டியில் எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.