விடுதலைப்புலிகள் ஆட்சிசெய்த வடகிழக்கை அரசியல் அங்கிகாரத்துடன் புலிகள்தான் ஆளவேண்டும். அது விரைவில் நடக்கும் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராஜா தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தற்போதைய தேர்தல் தொடர்பாக புரிந்துணர்வு கடிதம் ஒன்றை தமிழரசுகட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவிடம் கடந்த இருமாதங்களுக்கு முன்னர் வவுனியாவில் வைத்து வழங்கியிருந்தோம். அது தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடனும், தலைமையிடமும் கதைத்துவிட்டு பதில்சொல்வதாக கூறியிருந்தார். எனினும் இன்றுவரை அந்தவிடயம் தொடர்பாக எமக்கு எதனையும் அறிவிக்கவில்லை.
நாம் பெரிய நிபந்தனைகளை அவர்களிடம் முன்வைக்கவில்லை. ஏனையகட்சிகள் மற்றும் பல சுயேட்சைக்குழுக்கள் வாக்குகளை உடைக்கும் நோக்குடன் களம் இறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பிழைகளை விட்டாலும் எமது பாரம்பரிய கட்சியான கூட்டமைப்பை பலப்படுத்துவதனை நோக்காக கொண்டும், அவர்களது வெற்றிக்காக பாடுபடுவோம் என்றும், எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வடகிழக்கில் எமது கட்சிக்கு மூன்று உறுப்பினர்களை வழங்கவேண்டும் என்றவிடயத்தை நாம் புரிந்துணர்வு கடிதத்தில் முன்வைத்திருந்தோம்.
அந்த கடிதத்திற்கு இரண்டு மாதங்கள் கழிந்தும் மாவைசேனாதிராசா எமக்கான முடிவினை அறிவிக்கவில்லை. சந்திப்போம் என்று காலங்களை மாத்திரமே அவர் கடத்திக்கொன்டிருந்ததுடன், உண்மையான போராளிகளான எங்களை அவர் உதாசீனப்படுத்திவிட்டார். இந்த இக்கட்டான தேர்தல் காலத்தில் எம்மை ஏற்றுக்கொள்ளாத இவர்கள் இனிவரும் காலங்களில் எற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
உண்மையில் ஏனைய கட்சிகளை விட எமது கட்சி பிழைகளை நேரடியாகவே சுட்டிக்காட்டும் அது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தபோது நாம் பழகிய பழக்கமாகும்.போராளிகள் என்ற உணர்வுடனேயே நாம் அப்படியான கருத்துக்களை முன்வைப்போம். அந்தவிடயம் கூட்டமைப்பிற்கு பிடிக்கவில்லை.நாம் பிழைகளை தட்டிக்கேட்போம் என்ற பயம் அவர்களிற்கு இருக்கின்றது.
எனவே இனிவரும் காலங்களில் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பது நடைபெறாத காரியம் என்பதனை கூறிக்கொள்வதுடன் எதிர்வரும் காலங்களில் எமது கட்சி தனித்துவமாக செயற்படுவதாக தீர்மானித்துள்ளோம்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குறுக்காலபோன போராளிகள் என்ற வார்த்தையை சொல்லியிருந்தால் அதனை நாம் மறுதலிக்கின்றோம். போராளிகளிற்கு ஒரு பலமான கட்டமைப்பு இருந்தால் நாம் குறுக்கே போகாமல், நேராக பயணிப்போம். எமக்கு ஒரு கட்டமைப்பு இல்லாததன் காரணத்தினாலேயே போராளிகள் குறுக்கே திரிகின்றார்கள்.
அது போல யாருடன் பயணித்தாலும் எமது போராளிகள் அரசியல்வாதிகளைபோல தலையாட்டிக்கொண்டு பயணித்தால் எமக்கும் அவர்களிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். எனவே போராளிகள் தமது தற்துணிவை பயன்படுத்த வேண்டும்.
கூட்டடைப்பு எம்மை பலவீனமாக நினைக்கின்றது. ஆனால் இன்னும் 5,10 வருடங்களில் நாங்கள் தான் பலமாகவரப்போகின்றோம். விடுதலைப்புலிகள் ஆட்சிசெய்த வடகிழக்கை புலிகள்தான் அரசியல் அங்கிகாரத்துடன் ஆளவேண்டும்.
அதனை நாம் உருவாக்குவோம் என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்வதுடன், தமிழ்தேசிய கூட்டமைப்பை அடையாளம் இல்லாத நிலைக்கு நாம் தள்ளிவிடுவோம். அந்தளவுக்கு நாம் வேலைசெய்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM