எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் தராசு கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சில குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தராசு கூட்டணியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (28.07.2020) புத்தளம், மதுரங்குளி மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது நேற்று இரவு 9.30 மணியளவில் புத்தளம் ஹூதா பள்ளிக்கு அருகாமையில் புத்தளம் நகர பிதா , தராசு கூட்டணி வேட்பாளர் கே.ஏ.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தராசு கூட்டணி வேட்பாளரான எஸ்.எச்.எம்.நியாஸ், ரவூப் ஹக்கீமுடன் வருகை தந்தார்.

இதன்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர், வேட்பாளரான எஸ்.எச்.எம்.நியாஸை கூட்டம் இடம்பெறும் பிரதான மேடையில் ஏறுவதற்கு அனுமதி வழங்க முடியாது எனத் தடுத்து நிறுத்தியதுடன், அவரை கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் கோஷம் எழுப்பினர்.

இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த புத்தளம் பொலிஸாருடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் பாதுகாப்புக்காக வருகை தந்திருந்த பொலிஸாரும் ஒன்றினைந்து வேட்பாளரான எஸ்.எச்.எம்.நியாஸை மு.கா தலைவரின் வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், அங்கு இடம்பெற்ற சலசலப்பின் போது வேட்பாளரான எஸ்.எச்.எம்.நியாஸ் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கடும் உடல் உபாதைக்கு உள்ளான அவர் அன்றிரவு 11 மணியளவில புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கூறினார். குறித்த வேட்பாளர் எஸ்.எச்.எம்.நியாஸின் முதுகுப் பகுதி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இவ்வாறு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேட்பாளரான எஸ்.எச்.எம்.நியாஸை மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் , நேற்றிறையதினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், தராசு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள், முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் உள்ளிட்டோரும் வைத்தியசாலைக்கு சென்று நியாஸை பார்வையிட்டு வருகின்றனர்.