இன்று பிறந்தநாள் காணும் பொலிவுட்டின் முன்னணி நடிகர் சஞ்சய் தத் நடித்திருக்கும், 'கே.ஜி.எப் சாப்டர் 2: படத்தில் அவருடைய கதாபாத்திரத் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிடப்பட்டிருக்கிறார்கள்.

திரை உலகில் தமிழ் படைப்பாளிகள் உருவாக்கும் படைப்புகள் வெற்றி பெறுவதை போல் அண்டை மாநிலமான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மாநிலங்களில் உள்ள படைப்பாளர்களின் படைப்புகளும் இந்திய அளவில் கவனம் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியிருக்கின்றன. 

அந்த வகையில் கன்னடத்தின் முன்னணி நடிகரான யஷ் நடிப்பில் வெளியான 'கேஜிஎப் செப்டர் -1 ' கன்னட மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டு, வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதனை முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்த படத்தில் யஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியுடன் பொலிவுட்டின் மூத்த நடிகரான சஞ்சய் தத், நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தில் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் பொலிவுட் நடிகர் சஞ்சய் தத் முதன்முறையாக கன்னட படத்தில் நடிக்கிறார். இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரை போற்றும் வகையில் அவர் ஏற்றிருக்கும் ஆதிரா என்ற கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழுவினர் போஸ்டராக வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு ரசிகர்கள் இணையத்தில் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.