ஹர்ஷ்வி.பந்த்

கொவிட் - 19 தொற்றுநோய் தலைகாட்டத் தொடங்கிய இவ்வருட முற்பகுதியிலிருந்து தனது நிர்வாகத்தின் சொந்த குறைபாடுகள் பற்றிய விவாதங்களிலிருந்து அமெரிக்கர்களின் கவனத்தை திருப்புவது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பொறுத்தவரை ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது. கொரோனா வைரஸின் விளைவாக மரணமடைந்தோர் மற்றும் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, உலகின் ‘தலைமை நாடாக’ அமெரிக்கா வந்திருக்கிறது. 

இந்த நெருக்கடியை ட்ரம்ப் நிர்வாகம் கையாண்ட முறை அந்நோயின் கடுமைக்கு நிகரான முறையில் அமையவில்லை என்பது அமெரிக்காவிலும் உலகம் பூராகவும் பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது.

ட்ரம்பை பொறுத்தவரை, இது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கிறது. அவரது பலவீனங்கள் எல்லாமே அம்பலமாகி நிற்கின்றன. நெருக்கடிகளை கையாளுகின்ற முறையில் ட்ரம்ப்பைப் போன்று பலவீனமாக முன்னர் இருந்த எந்தவொரு அமெரிக்கத் தலைவரும் நடந்துக்கொள்ளவில்லை. 

கடந்த காலத்தில் தனது எதிராளிகளை – ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மற்றும் ஊடகங்கள் - இலக்கு வைப்பதன் மூலம் மக்களின் கவனத்தை திசைத்திருப்பி அவரால் தனது ஆதரவாளர்களை அணித்திரட்டக்கூடியதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அவரது ஆட்சிமுறையின் தோல்விகளை – அதுவும் குறிப்பாக அடுத்த சுற்று தேர்தல்களை நாடு அக்கறையுடன் நோக்கத் தொடங்கியிருக்கும் ஒரு நேரத்தில் - அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதன் பிறகு சீனாவின் விவகாரம் வெளிக்கிளம்பியது. 2020 ஜனாதிபதித் தேர்தல் காலம் இதுவரையில் பல வழிகளில் தனித்துவமானதாக அமைந்திருக்கிறது. இதில் அரசியல் விவாதத்தை வெளிநாட்டுக்கொள்கை பிரச்சினை ஒன்று ஆக்கிரமித்திருக்கிறது. அமெரிக்கா உலகை மேலாதிக்கம் செய்கின்றபோதிலும், அதன் தேர்தல்களை, அரசியல் கட்சிகள் பிரதானமாக உள்நாட்டு பிரச்சினைகளை விவாதித்து பெருமளவுக்கு குறுகிய ஒரு மனப்பான்மையுடனேயே நோக்கி வந்திருக்கின்றன. 

ஆனால், இத்தடவை தேர்தலில் ட்ரம்ப் சீனாவை ஒரு முக்கிய பிரச்சினையாக தானே உருவாக்கியிருக்கின்றார். தனது பதவிக்காலம் முழுவதும் அவர் சீனாவுடன் மிகவும் கடுமையாகவே நடந்து வந்திருக்கிறார். திடீர்திடீரென தனது மனோபாவத்தை மாற்றுகின்ற சுபாவத்தை போலன்றி சீனாவுக்கு எதிராக அமெரிக்கர்கள் மத்தியில் அபிப்பிராயத்தை திரட்டுவதில் குறிப்பிடத்தக்களவு தொடர்ச்சியாக உறுதியான அணுகுமுறையை அவர் கடைப்பிடித்து வந்திருக்கிறார். கொள்கைப் பரப்பில் அவரது நீடித்த மரபாக சீனக் கொள்கையே பல வழிகளில் அமையப்போகிறது.

எதிர்வரும் நவம்பர் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நாடு நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு அமெரிக்கா நகர்ந்துக்கொண்டிருக்கின்றது. பொதுவில் அமெரிக்காவில் காணப்படுகின்ற ஒரு வலுக்குன்றிய மனோபாவம் நாட்டின் ஆழமான சமூக மற்றும் அரசியல் பிளவுகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது. 

கொவிட் 19 தொற்று நோய் தொடங்கி ஜோர்ஜ் பிளய்ட்டின் மரணத்தையடுத்து, கடந்த வாரம் மூண்ட வன்முறைகள் வரையில் சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கு அமெரிக்கா தயாராயிருக்கவில்லை போல் தெரிகிறது. உலகில் சுதந்திரத்தினதும் ஜனநாயகத்தினதும் கலங்கரை விளக்கமாக விளங்குகின்ற நாடாக நீண்ட காலமாக பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்ற நாடு என்ற வகையில் அமெரிக்காவின் அந்தஸ்துக்கு இது பொருத்தமானதொன்றல்ல. மிகவும் அவசியமாக தேவைப்படுகின்ற இந்நேரத்தில் அரசியல் தலைமைத்துவம் முறையாக செயற்படாமல் இருக்கின்ற பரிதாப நிலை.

இத்தகைய கொந்தளிப்பான பின்புலத்திலேயே அமெரிக்கா அதன் தேர்தலின் இறுதிக்கட்டத்துக்குள் பிரவேசிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. முன்னைய ஜனாதிபதித் தேர்தல்களை போன்று பரபரப்பை இந்தத் தடவை தேர்தலில் காணமுடியவில்லை. ஒரு தணிந்த நிலையிலேயே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் விளக்கங்களை வடிவமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஒருவர் எந்த விளக்கத்தை விரும்பி ஏற்றுக்கொள்வார் என்பதை அவரது அரசியல் சார்பே தீர்மானிக்கிறது. ஒரு புறத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனை விடவும் பலவீனமான நிலையில் இருப்பதாக தாராளவாதிகள் வாதிடுகிறார்கள். கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாள்வதில் கடைப்பிடித்த தவறான அணுகுமுறையும் இனக்கலவரங்களும் ட்ரம்ப்பை பலவீனப்படுத்தியிருப்பதாக அவர்கள் காரணம் கூறுகிறார்கள். 

வாக்காளர்கள் இனரீதியாக பிளவுபட்டிருப்பதன் காரணத்தினால் அமெரிக்காவின் வடமத்திய பிராந்தியத்தின் 12 மாநிலங்களில்  ட்ரம்ப் தனது செல்வாக்கை அதிகரித்து வலுப்படுத்தும் நிலை ஏற்படும் என்றும் அதன் விளைவாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகக்கூடிய வாய்ப்புகள் சுலபமாக்கப்படும் என்று பழமைவாதிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். பிரபல்யமான ஆபிரிக்க - அமெரிக்க வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜோ பிடன், ‘எனக்கா அல்லது ட்ரம்புக்கா ஆதரவளிப்பது என்பதை தீர்மானிப்பதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால், நீங்கள் ஒரு கருப்பர் அல்ல’ என்று கூறியதன் மூலம் ஓர் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால், கொவிட் -19 தொற்றுநோயை கையாளுவதில் தான் முகங்கொடுக்கின்ற சவாலை புரிந்துகொண்டதும் ட்ரம்ப் சீனா தொடர்பான தனது நிலைப்பாட்டை கடுமையாக்கி பல்வேறு முனைகளில் நெருக்குதல்களை பிரயோகிக்க ஆரம்பித்தார். வர்த்தகம், தொழில்நுட்பத்திலிருந்து சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஹொங்கொங் பிரச்சினை வரை உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளும் பல்வேறு முனைகளில் மோதிக் கொண்டிருக்கின்றன. ஜனவரியில் சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டதை கொண்டாடிய ட்ரம்ப் அதை நலம்மிக்க – பரஸ்பர கூட்டு பங்காண்மை நோக்கிய முக்கியமான ஓர் நடவடிக்கை என்று வர்ணித்தார். 

ஆனால் மே மாதம் அளவில் அந்த உடன்படிக்கை பற்றி தனது மனநிலையை மாற்றிக்கொண்ட அவர் சீனாவுடனான விவகாரங்கள் பெரும் ஏமாற்றத்தை தந்ததாக கூறினார். தொற்றுநோய் பரவலை தடுத்திருக்க முடியும் என்ற போதிலும் அதை செய்யத்தவறிய சீனா, உலகெங்கும் அது பரவ அனுமதித்து விட்டதென்று அதற்கு காரணமும் கூறினார்.

கொவிட் -19 பற்றிய தகவல்களை மூடிமறைத்த சீனாவின் நேர்மையீனமே சீனாவின் ஹாபி மாகாணத்தின் தலைநகர் வூஹானில் தோன்றிய வைரஸ் கொடூரமான முறையில் பரவும் பிரச்சினையை உலகினால் கையாள முடியாமல் போனமைக்கு காரணமாகும் என்று ட்ரம்ப் நிர்வாகம் குற்றஞ் சாட்டியது.

ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டிய பிறகு ட்ரம்ப் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கை நேரடியாக இலக்குவைத்து தாக்கத் தொடங்கினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பற்றி முன்னெடுக்கப்படும் தவறான பிரசாரங்களின் பின்னணியில் சீனத் தலைவரே இருப்பதாக குற்றஞ்சாட்டினார். ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோன் பிடனை வெற்றிபெற வைப்பதற்கு சீனா கடுமையாக பிரயத்தனம் செய்வதாக அவர் கூறியது முக்கியமாக கவனிக்கத்தக்கதாகும்.

உலக சுகாதார நிறுவனத்தின் மீது முற்றுமுழுதான கட்டுப்பாட்டை சீனா கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய பிறகு அந்த நிறுவனத்துடனான தனது நாட்டின் தொடர்பை ட்ரம்ப் முடிவுக்கு கொண்டு வந்தார். சீனாவை இலக்குவைத்த ஒரு நடவடிக்கையாக உலகின் மிகப்பெரிய தனவந்த நாடுகளின் அமைப்பான ஜி-7 இல் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை சேர்த்து அதை விஸ்தரிப்பதில் அக்கறை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஹொங்கொங்கில் சீனாவினால் கொண்டு வரப்பட்ட புதிய பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக கண்டனம் செய்த ட்ரம்ப் அதன் தொடர்ச்சியாக வர்த்தகம் மற்றும் பயணங்களில் ஹொங்கொங்குக்கு இதுகாலவரை வழங்கிய சிறப்புச் சலுகைகளை  நிறுத்தினார். சீனா அந்த புதிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய பிறகு ஹொங்கொங்கை சுயாதீனமான பிராந்தியமாக இனிமேலும் கருத முடியாது என்று அறிவித்தார். 

அமெரிக்க விமானங்கள் மீண்டும் சீனாவுக்கு பறப்பதற்கு பெய்ஜிங்கை அனுமதிக்க வைப்பதற்கான நெருக்குதலை கொடுக்கும் ஒரு முயற்சியாக ஜூன் நடுப்பகுதியிலிருந்து சீனப் பயணிகள் விமானங்கள் அமெரிக்காவுக்கு வருவதை ட்ரம்ப் நிர்வாகம் தடை செய்தது.

சீனாவை இலக்குவைத்த இந்த சகல நடவடிக்கைகளுக்கும் மத்தியில் ட்ரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் அண்மையில் எழுதி வெளியிட்ட சுயசரிதையில் ட்ரம்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பல தகவல்களை வெளியிட்டிருந்தார். தனது தேர்தல் பிரசாரங்களுக்கு உதவும் முகமாக அமெரிக்க விவசாய உற்பத்திகளை கொள்வனவு செய்யுமாறு சீன ஜனாதிபதியிடம் வலிந்து வேண்டுகோள் விடுத்ததாகவும் முஸ்லிம் உய்குர் சிறுபான்மையினரை பலவந்தமாக தடுத்து வைப்பதற்கான முகாம்களை நிர்மாணிக்கும் சீனாவின் திட்டத்தை ட்ரம்ப் அங்கீகரிக்கும் தொனியில் பேசினார் என்றும் பொல்டன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

சீனா தொடர்பில் மிகவும் கடுமையான போக்கை கடைபிடிக்கும் ஒருவராக தன்னை காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கும் ஜனாதிபதி ஒருவருக்கு பொல்டன் வெளியிட்ட தகவல்கள் மிகவும் பாதிப்பாக அமையும் என்பதை நிச்சயமாக நம்பலாம்.

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றநிலை தீவிரமடைந்து வந்ததை காணக்கூடியதாக இருந்தது. அமெரிக்கர்கள் மத்தியில் தனக்கு கூடுதல் ஆதரவை திரட்டும் நம்பிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் சீனாவுடனான தகராறை ஒரு பெரிய காரணியாக்கிய ட்ரம்ப் சீனா தொடர்பில் பிடன் பலவீனமான ஒரு போக்கையே கொண்டிருக்கிறார் என்று காட்டுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 

அடுத்த சில மாதங்களில் உள்நாட்டு விவகாரங்களில் ட்ரம்ப் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகள் தொடர்பில் விவாதம் தீவிரமடையவிருக்கும் நிலையில், இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையிலான தற்போதைய அரசியல் சமரில் சீன விவகாரம் எந்தளவுக்கு பங்கை செலுத்தும் என்பதை அவதானிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

‘கட்டுரையாளர்: டில்லி ஒப்சேவர் ரிசேர்ச் பவுண்டேசனின் ஒரு இயக்குனரும் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச விவகாரங்கள் பேராசிரியருமாவார்’.