தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்  அந்த சட்டமூலத்திற்கு அமைய அரச நிறுவனங்களில் கடமையாற்றுவதற்கு சுமார்  8 ஆயிரம்  அதிகாரிகள்  அவசியமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் அரசாங்கம் புதிதாக  8 ஆயிரம்  உத்தியோகத்தர்களை  அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்போகிறதா? அல்லது  தற்போது அரச சேவையில் இருக்கின்ற உத்தியோகத்தர்களைக் கொண்டு இதற்கான பணிகளை  முன்னெடுக்கப்போகின்றதா என்பது தொடர்பில்  இதுவரை   எந்த  அறிவிப்பும் இல்லை. 

தகவலறியும் சட்டமூலத்தின் பிரகாரம் அதிகார சபை நிறுவப்படவேண்டுமென்பதுடன்  ஆணையாளரும் நியமிக்கப்படவேண்டும். 

அத்துடன்  அனைத்து  அரச நிறுவனங்களிலும் தகவல் பிரிவொன்று உருவாக்கப்படவேண்டியதுடன் அவற்றுக்கு அதிகாரிகளும் நியமிக்கப்படவேண்டும்.  அந்தவகையில் அண்ணளவாக  8000  அரச அதிகாரிகள் இந்தப் பணிக்காக நியமிக்கப்படவேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் தற்போது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்டமூலமானது நடைமுறைக்கு  வருவதற்கு  இன்னும் சில காலம் எடுக்கலாமென  எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கையின் அரசியலமைப்பில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவாக தகவலறியும் சட்டமூலமானது மக்களின் அடிப்படை உரிமையாக உறுதிப்படுத்தப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.  

கடந்தமாதம் இந்த தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.