நாட்டில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,807 ஆக உயர்வடைந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய இருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த 175 பேர் இன்றைய தினம் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2,296 ஆக பதிவாகியுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 130 பேரும், பானகொட இராணுவ வைத்தியசாலையிலிருந்து 22 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தயசாலையிலிருந்து 13 பேரும், தேசிய தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்து 6 பேரும், வெலிகந்தை, இரணவில வைத்தியசாலைகளிலிருந்து தலா இருவரும் இவ்வாறு குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது 500 கொரோனா தொற்றாளர்கள் நாடு முழுவதுள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் மேலும் 65 பேரும் வைத்தியக் காண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.