(நா.தனுஜா)

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் 54 பேரினதும், கட்சியிலிருந்து விலகி அல்லது கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்படும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 61 பேரினதும் உறுப்புரிமையை இரத்துச் செய்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்தார்.

கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் இன்று செவ்வாய்கிழமை கட்சித்தலைமையகமாக சிறிகொத்தாவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்துப் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், அதனடிப்படையிலேயே மேற்படி 115 பேரின் உறுப்புரிமையை இரத்துச் செய்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட அனைவருக்கும் அதுகுறித்த கடிதம் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்படும் என்றும், அதன் பின்னரேயே கட்சியிலிருந்து உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களின் விபரங்களைப் பகிரங்கமாக வெளியிட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி எதிர்வரும் பொதுத்தேர்தலில் வேறு கட்சியின் சார்பில் போட்டியிடுவதால் உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்ட 54 பேரின் பெயர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்றும், உறுப்புரிமை இரத்துச்செய்யப்பட்ட 61 உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரங்களும் அறிவிக்கப்படும் அதேவேளை அந்த வெற்றிடங்களுக்குப் புதிதாக நியமிக்கப்படவிருப்பவர்கள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் விதிமுறைகளுக்கும் முரணாக செயற்பட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 200 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உறுப்புரிமையை இரத்துச்செய்வது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறினார்.