(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அந்த மக்களுக்கு வீட்டு திட்டங்களை வழங்குவோம் என உறுதியளித்த கனக ஹேரத், தேர்தல் காலங்களில் வேறு கட்சிகளால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம். எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் விவாதம் செய்ய சிறு பிள்ளையே போதும் எனவும் குறிப்பிட்டார். 

மாவனெல்லையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று நாம் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவோம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலின் பின்னரும் பிரதமராக நியமிப்பதற்கு பாடுபடுவோம். மாவனெல்ல தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறுவோம்.

தற்போது கட்சி பேதமின்றி சகல மக்களும் பொதுஜன பெரமுனவின் பிரசார கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அது ஜனாதிபதியுடைய சிறப்பான வேலைத்திட்டங்களினாலாகும். ஜனாதிபதி கோத்தாபய பாதாள உலக செயற்பாடுகளையும் போதைப் பொருளையும் முற்றாக ஒழிப்பார் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தற்போது பகிரங்க விவாதங்களில் பங்கேற்குமாறு சஜித் பிரேமதாச பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கின்றார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விவாதங்களில் பங்கேற்காத சஜித் பிரேமதாசவே இதனைக் கூறுகின்றார். விவாதங்களில் கலந்து கொள்வதற்கு அவர் தகுதியானவர் அல்ல. சிறு பிள்ளையொன்றையே அவருடன் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது. இந்த மக்களுக்கு வீட்டு திட்டங்களை மேம்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு கற்றலுக்கான சிறந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இளைஞர் யுவதிகளுக்கான தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.