(ஆர்.யசி)

போராட்டத்தின்  மத்தியில் மீட்டெடுத்த ஜனநாயகம் மீண்டும் தவறான தலைமைகள் கைகளுக்கு சென்றால் ஜனநாயகத்தை மீட்டெடுக்க இன்னும் பல தசாப்தகாலம் போராடவேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நல்லாட்சிக் காலத்தில் ராஜபக்ஷக்களை காப்பாற்றும் முக்கிய பொறுப்பை மைதிரியும் ரணிலுமே கையில் எடுத்திருந்தனர் எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் கடந்தகால அரசியல் தடைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நல்லாட்சியை ஆரம்பிக்க தலைமை தாங்கிய முக்கிய நபர்கள் அனைவருமே நல்லாட்சியை நாசமாக்கிவிட்டனர். நாம் உருவாக்கிய நல்லாட்சியில் ஜனாதிபதியாக நாற்காலியில் அமர்ந்த மைத்திரிபால சிறிசேன 360 பாகையில் தனது அரசியல் பயணத்தை  திரும்பி மீண்டும் ராஜபக் ஷவின் முகாமில் தஞ்சம் புகுந்து எம்மை நாசமாக்கியதை எம்மால் இன்னமும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. ஆட்சியில் பல தடைகள் ஏற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணமாகும்.

 அதேபோல் நல்லாட்சி  என்பது அரசியல் அமைப்பு பேரவையை உருவாக்குவதும், சட்டங்களை கொண்டுவருவதும் என ரணில் நினைத்துக்கொண்டிருந்தார்.  ஊழல், குற்றங்களை நிறுத்துவதற்கு இவர்கள் எவரும் இணக்கம் தெரிவிக்கவில்லை. அர்ஜுன மகேந்திரன் விடயத்தில் நான் ஆரம்பத்தில் இருந்து முரண்பட்டுக்கொண்டே இருந்தேன். மகேந்திரனை நியமிக்காது தடுக்க வேண்டும் என்பதில் நாம் அமைச்சரவையிலும் முரண்பட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் ரணில் அதற்கு சற்றும் செவிமடுக்கவில்லை. தனது அமைச்சின் கீழ் எடுக்கும் தீர்மானத்தை வேறு எவரும் மாற்றியமைக்க வேண்டாம் என்றார். அதன் விளைவையே இன்று அனைவரும் அனுபவிக்க வேண்டியுள்ளது.

நீதி அமைச்சராக இருந்த விஜயதாச ராஜபக்ஷவின் சுயரூபம் இன்று என்னவென்று தெரிகின்றது தானே. எம்முடன் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு ராஜபக்ஷக்களுக்காக செயற்பட்டவர்களே இவர்கள். இவர்கள் திட்டமிட்டே ஆட்சியை வீழ்த்தியுள்ளனர். குற்றவாளிகளை காப்பாற்றி மீண்டும் நாட்டினை ஊழல் ஆட்சியில் வைத்திருக்கும் அரசியல் கொள்கையே இவர்களிடம் இருந்தது.

 ராஜபக்ஷவையும் அவரது மனைவி சிறந்தியையும் காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்வே காரணம். அவர்களிடம் வாக்குறுதி வழங்கியள்ளதாக என்னிடமே ரணில் கூறினார். அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷவை காப்பாற்றுவதாக மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி கொடுத்திருந்தார். குற்றவாளிகளை காப்பாற்றிய பிரதான பொறுப்பு நல்லாட்சி தலைவர்கள் இருவரிடமுமே இருந்தது. ஆனால் துரோகிகளாக நாம் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டோம்.

இன்றும் எம்மை பழிவாங்கும் அரசியல் வேலைத்திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றார்.