தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஜகமே தந்திரம்' என்ற படத்தின் முதல் பாடல், அவரது பிறந்த நாளான இன்று வெளியாகியிருக்கிறது.

முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஜகமே தந்திரம்'. இந்தப்படத்தில் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இவருடன் புதுமுக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, சஞ்சனா நடராஜன், வடிவுக்கரசி, நடிகர்கள் கலையரசன், சௌந்தரராஜா, தேவன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் கோஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

37வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் தனுஷுக்கு பிறந்தநாள் பரிசாக அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஜகமே மந்திரம்' படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் வெளியாகியிருக்கும்,'ரகிட. ரகிட ரகிட..'எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே  'பரியேறும் பெருமாள்' பட புகழ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'கர்ணன்' படத்தின் பர்ஸ்ட் லுக்கும் இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.