( எம்.எப்.எம்.பஸீர்)

 

தகர்க்கப்பட்ட குருணாகல் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த கட்டிடம்  எனக் கூறப்படும் புவனேகபாகு மன்னனின் சபா மண்டபம் தொடர்பில் வட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அறிக்கை பதில் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அறிக்கையே பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு  நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் குறித்த  அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெறுவதாகவும் இதுவரை எவரையும் பொலிஸார் சந்தேக நபராக அடையாளம் காணவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த தொல்பொருள் கட்டிடம் தகர்த்தப்பட்டமை தொடர்பில் குருணாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிலும் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கையளிக்கப்பட்டுள்ள அரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.