( எம்.எப்.எம்.பஸீர்)

குற்றச் செயல்கள் உள்ளிட்ட இரகசிய தகவல்களை வழங்குவதற்காக  இரண்டு துரித தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கப்பம் பெறல், போதைப்பொருள் கடத்தல், பாரிய ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய இரகசிய தகவல்களை வழங்க 1997 என்ற துரித தொலைபேசி இலக்கமும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தலால் திரட்டப்படும் சொத்துக்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தகவல் வழங்க 1917 என்ற துரித இலக்கமும் இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில்  நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்தத் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

கப்பம் பெறல், போதைப்பொருள் கடத்தல், பாரிய ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், பொது மக்கள் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள்,  போன்ற விஷேட காரணிகளை தெரிவிக்க  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  1997 என்ற துரித தொலைபேசி இலக்கம் பிரத்தியேக தனியான பொலிஸ் குழுவால் கையாளப்படவுள்ளது.

இது பொலிஸ் உளவுப் பிரிவான பொலிஸ் விஷேட நடவடிவிக்கை பிரிவில் மிக இரகசியமாக இயங்கும் குழுவொன்றினால் கையாளப்படுவதால் தகவல் கொடுப்பவரின் இரகசியம்  பேணப்படுவதை உறுதி செய்வதாக அமையும் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், போதைப்பொருள் கடத்தலால் திரட்டப்படும் சொத்துக்கள் உள்ளிட்ட  கருப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய முடியுமான சொத்து குவிப்புக்கள் தொடர்பிலான விடயங்கள் குறித்து  1917 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய  சேனாரத்ன,  அந்த இலக்கமானது அண்மையில் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட  சொத்து குவிப்பு விடயங்கள் தொடர்பில் விசாரிக்கும் விஷேட பிரிவின் கட்டுப்பாட்டில் செயற்படவுள்ளதாக கூறினார். இந்த இலக்கத்துக்கு புலமை சொத்துக்கள் தொடர்பிலான குற்றங்கள் தொடர்பிலும்  தகவல் அளிக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.