( எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் அமைச்சர்களான ,ரவி கருணாநாயக்க, ரிஷாத் பதியுதீன் ஆகியோரிடம் நேற்று சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விஷேட வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டது.   

இரு வேறு விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்தில் ஆஜரான ரவி கருணாநாயக்கவிடம் நாலரை மணி நேரமும், வவுனியா - இரட்டைப் பெரிய குளம் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள சி.ஐ.டி. கிளையில் ஆஜராகிய ரிஷாத் பதியுதீனிடம் 5 மணி நேரமும் விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை விசாரணைகளுக்காக  நேற்று  சி.ஐ.டி.யில் ஆஜராக கோட்டை நீதிவான் நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது.

எனினும் கடந்த வெள்ளியன்று ரவி கருணாநாயக்க சார்பில் மன்றில் ஜனதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்னம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, ஆகியோரின் வாதங்களை கேட்டபின்னர் நீதிவான் அந்த உத்தரவை திருத்தியிருந்தார்.

ரவி கருணாநாயக்க ஐ.தே.க.வின் உப தலைவர் என்ற ரீதியில் பாரிய வேலைப்பளு உள்ளதால் தேர்தலின் பின்னரான  திகதியை விசாரணைக்கு தருமாறு ரவி கருணாநாயக்க சார்பில் கோரப்பட்டது. அதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டது.

இந் நிலையில் இரு தரப்புக்கும் பாதிப்பு இல்லாமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைய  27 ஆம் திகதி திங்களன்று  நாலரை மணி நேரம் மட்டும்  சி.ஐ.டி.யில் வாக்கு மூலம் வழங்க ரவி கருணாநாயக்கவுக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி  நேற்று முற்பகல் 9.00 மணி  முதல் பிற்பகல் 1.30 மணி வரை ரவி கருணாநாயக்கவிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை  நேற்று சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு 3 ஆம் இலக்க விசாரணை அறையில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டிருந்தது.

 உயிர்த்த ஞாயிறு தினமான 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி இடம்பெறும் பிரிதொரு விசாரணைக்காக அவரை இவ்வாறு அங்கு ஆஜராகுமாறு, சி.ஐ.டி.யினரின் கோரிக்கையை ஏற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

கடந்த வெள்ளியன்று  அது தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடையீட்டு மனுவொன்றினூடாக ரிஷாத் பதியுதீன் சார்பில் விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன மன்றில் ஆஜரானதுடன், பாராளுமன்ற தேர்தலின் பின்னரான ஒரு திகதியை தமக்கு சி.ஐ.டி.யில் ஆஜராக வழங்குமாறு அவர் கோரினார். மன்னார் பகுதியில் தேர்தலில் போட்டியிடும் அவர், அங்கு கட்சியின் தலைவர் என்ற ரீதியில்  தேர்தல்கள் வேலையில் உள்ளதால்,  கொழும்புக்கு வந்து செல்ல சுமார் 16 மணி நேரங்கள் தேவைப்படும். அது போக்குவரத்துக்கு செலவாகும் காலம். எனவே தேர்தல் தொடர்பில் செயற்பட தடங்கல்கள் ஏற்படுவதால் தேர்தலின் பின்னரான திகதியொன்றினை தருமாறு அவர் கோரினர்.

இதுதொடர்பில் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் துஷித் முதலிகே மன்றில் விடயங்களை முன்வைத்த நிலையில், இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்து நீதிவான் ஏற்கனவே  விடுத்த உத்தரவை திருத்தினார்.

அதன்படி சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு வவுனியா சி.ஐ.டி. அலுவலகத்துக்கு சென்று ரிஷாத்திடம் வாக்கு மூலம் பெறவும், திங்களன்று வவுனியா சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைகளுக்கு ஆஜராவது போதுமானது என ரிஷாத் பதியுதீனுக்கும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

 அதன்படி கொழும்பிலிருந்து விசேட சி.ஐ.டி. குழு வவுனியா, இரட்டைப் பெரியகுளத்தில் உள்ள சி.ஐ.டி. கிளைக்கு சென்றிருந்ததுடன் ரிஷாத் பதியுதீன் முற்பகல் 9.00 மணியளவில் அங்கு ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடாத்தப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.