நாட்டில் உள்ள அனைத்து குளங்களையும் புனர்நிர்மாணம் செய்வதற்கு தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்குவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீண்டகாலமாக உரிய முறையில் குளங்கள் மற்றும் கால்வாய் கட்டமைப்புகளை புனர்நிர்மாணம் செய்யப்படாதமை குறித்து ஜனாதிபதி கடந்த தினங்களில் விஜயம் செய்த அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் முன்வைத்த மிக முக்கிய பிரச்சினையாகும்.

விவசாயத்திற்கும் நாளாந்த வாழ்விற்கும் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றுக்கு தீர்வாக முறையான மற்றும் உரிய தரங்களுடன் கூடிய திட்டமொன்றுடன் அனைத்து குளங்களையும் புனர் நிர்மாணம் செய்யப்படுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நேற்று இரண்டாம் நாளாகவும் குருணாகலை மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி  குளியாப்பிட்டிய கூட்டுறவு விளையாட்டரங்கில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

வேட்பாளர் சமன் பிரிய ஹேரத் இம்மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். 

வேட்பாளர் சோமசிறி குணதிலக்க பிங்கிரிய தும்மலசூரிய, நெரலுகம விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார். மட்பாண்ட கைத்தொழில்சார் சுயதொழிலில் ஈடுபடுகின்ற சிலர் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு தெரிவித்தனர். அவர்கள் சுதந்திரமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு இடமளிக்குமாறு ஜனாதிபதி அவ்விடத்திலேயே பொலிஸாருக்கு உத்தரவிட்டார். 

வேட்பாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா கட்டுகம்பொல, பன்னல பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, 150 வருடகாலம் பழமைவாய்ந்த பன்னல தேசிய பாடசாலைக்கு புதிய நிர்வாக கட்டிடம் ஒன்றையும் நீச்சல் தடாகம் ஒன்றையும் நிர்மாணித்துத் தருமாறு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பித்தளை மற்றும் ஏனைய சம்பிரதாய கைத்தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள் கடன்களை பெற்றுக்கொள்ளும்போது தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதிக்கு தெரிவித்தார்கள்.

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு மக்கள் விடுத்த வேண்டுகோள்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தமது பிரதேசங்களில் நடைபெறும் போதைப்பொருள் வியாபாரங்கள் தொடர்பாக பெயர் குறிப்பிடாது ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு மக்களிடம் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.