-ஹரிகரன்

அண்மைக்காலங்களாக இலங்கையில் தேர்தல்கள் நடக்கின்ற போதெல்லாம், வெளிநாட்டுத் தலையீடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியாவது வழக்கமாக மாறியுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு இன்னமும், மிகக் குறுகிய நாட்களே உள்ள நிலையில், வெளிநாட்டுத் தலையீடுகள் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.

பொதுவாகவே இலங்கைத் தேர்தலில் வெளிநாட்டுத் தலையீடுகள் என்று செய்திகள் வரும் போது மூன்று நாடுகள் தான் நினைவுக்கு வருவது வழக்கம்.

அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகியனவே அவை. இலங்கையில் நடந்த தேர்தல்களில் இந்த நாடுகள் தலையீடு செய்ததாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எனவே தான், வெளிநாட்டுத் தலையீடுகள் என்றவுடன், இந்த நாடுகள் நினைவுக்கு வருகின்றன.

Coronavirus: Honeywell silent on whether Trump exempted from mask rule

2010 ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவு தம்மைத் தோற்கடிக்க முனைந்தது என்றும், நாட்டு மக்களால் அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்ட நிலையில், 2015இல்  அவர்கள் அந்த திட்டத்தை நிறைவேற்றினார் என்றும் அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகாவை மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக களமிறங்கியதும்,   2015இல் மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்திருந்ததும் அமெரிக்கா தான் என்பது பொதுவாக உள்ள குற்றச்சாட்டு.

அதேவேளை, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது, இந்திய புலனாய்வுப் பிரிவான “றோ” பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, சிறுபான்மையினக் கட்சிகளை ஒன்றிணைப்பதில் பங்காற்றியதாக குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன.

எனினும் இந்திய புலனாய்வு அமைப்பு மீது குற்றம்சாட்டிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பின்னர் அதனை மழுப்பிக் கொண்டார்.

அதுபோலவே, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக சீனா தலையீடு செய்தது என்ற குற்றச்சாட்டுகளும் இருந்தன.

சீன நிறுவனங்கள் மகிந்த ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக பெருமளவு நிதியை செலவிட்டதாகவும், மகிந்த ராஜபக்சவின் படம் பொறித்த தொப்பிகள், மணிக்கூடுகள், ரிசேட்கள் போன்ற  பரிசுப் பொருட்களை பெருமளவில் வழங்கியிருந்தன என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

ஆனால் எந்தவொரு நாட்டினதும் உள்நாட்டு அரசியலில் தாங்கள் தலையீடு செய்வதில்லை என்று சீனா திட்டவட்டமாக மறுத்திருந்தது.

எவ்வாறாயினும், மேற்படி மூன்று நாடுகளினதும் தலையீடுகள் குறித்த செய்திகள் அல்லது குற்றச்சாட்டுகள் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்தியப் பெருங்கடலின் கேந்திர மையத்தில் அமைந்துள்ள இலங்கையில், இந்த மூன்று நாடுகளுக்கும் இருக்கின்ற ஆர்வம், அல்லது அக்கறை தான் இத்தகைய செய்திகளுக்குக் காரணம்.

தற்போதைய சூழலில் இலங்கையை தக்க வைத்தல் என்பது இந்த மூன்று நாடுகளுக்கும் முக்கியமான தேவையாக இருக்கிறது.

சீனாவின் தலையீட்டை விரும்பாத அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் தலையீட்டை விரும்பாக சீனாவும், மாறி மாறி தலையீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

இலங்கையின் மீதான அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதில், குறித்த நாடுகளுக்கு உள்ள அக்கறை தான், தலையீடுகள் குறித்த செய்திகள் வெளியாகின்றமைக்கு முக்கிய காரணம்.

கடந்த 21ஆம் திகதி இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்த கட்டுரை ஒன்றில், இலங்கையின் உள்நாட்டு அரசியலில் சீனா தலையீடு செய்வதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

China Standards 2035: Tech plan could face challenges to live up ...

தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சீன அரசாங்கப் பிரதிநிதிகள் இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசி வருகின்றனர் என்றும் அந்த கட்டுரையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

சில கூட்டங்கள் இரகசியமாக மூடிய அறைக்குள் நடப்பதாகவும், சில சந்திப்புகள் வெளிப்படையாக நடப்பதாகவும் இந்திய ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

இலங்கையில் எல்லா கட்சிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமது தொடர்புகளை வலுப்படுத்துவதில் சீனா ஆர்வம் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்தக் கட்டுரை வரையப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுரை வெளியாவதற்கு முதல் நாள், ஜூலை 20ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரனும் தூதரக அதிகாரிகளும் திருகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை  அவரது இல்லத்தில் சந்தித்த அவர்கள், பின்னர் நிலாவெளியில் உள்ள விடுதியில் வேறு சில தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.

எனினும், இந்தச் சந்திப்புகள் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டன. என்ன விடயங்கள் பேசப்பட்டன என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பிய போது, பாலச்சந்திரனை தமக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும், அவருடனான சந்திப்பு தனிப்பட்டது என்றும் கூறி மழுப்பிக் கொண்டார்.

அதே தினம் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுமந்திரனிடம் இந்த சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, அந்தச் சந்திப்பு தொடர்பாக தாம் எதுவும் அறியவில்லை என்று கூறியிருந்தார்.

தனிப்பட்ட சந்திப்பாக இருந்ததால், அதுபற்றி சுமந்திரன் அறியாமல் இருந்திருக்கக் கூடும்.

அல்லது, அந்த சந்திப்பின் நோக்கத்தை மறைக்க வேண்டும் என்பதற்காகவும் அவர் அவ்வாறு கூறியிருக்கலாம்.

அதேவேளை, இந்திய தூதரக அதிகாரிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னரும் தங்களை சந்தித்திருந்தனர் என்றும் அது வழக்கமான செயற்பாடு தான் என்றும் சுமந்திரன் கூறியிருந்தார்.

அந்தச் சந்திப்பில் அரசியல் தீர்வு, தேர்தல் குறித்து பேசப்பட்டன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

PM Narendra Modi to address nation today, next 15 days crucial to ...

ஆக, இந்தியத் தரப்பும் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ அரசியல் கட்சிகளுடனான பேச்சுக்கள், கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது என்பது வெளிப்படையாகியிருக்கிறது.

ஒரு பக்கத்தில் சீனத் தலையீடுகள் குறித்து இந்திய ஊடகம் சர்ச்சையை எழுப்பியிருக்கும் நிலையில், இந்தியாவும் அதற்குப் போட்டியாக சந்திப்புகளில் இறங்கியிருக்கிறது என்பதே உண்மை.

சீனத் தலையீடுகளுக்குப் பின்னர் தான், இந்தியா களமிறங்கியதா அல்லது இந்தியா தனது தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக, சீனாவை இழுக்கிறதா என்ற சந்தேகங்களும் இல்லாமல் இல்லை.

இரண்டு நாடுகளுக்கும், இலங்கையின் மீதும் இலங்கையின் அரசியலின் மீதும் ஆர்வம் இருப்பதால், இரண்டு நாடுகளினதும் தலையீடுகள் குறித்த செய்திகளை நம்ப முடியாமல் இருக்க முடியாது.

அதேவேளை,  அமெரிக்கா இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவே காட்டிக் கொள்கிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இந்த தேர்தலில் தலையீடு செய்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே அமெரிக்க எதிர்ப்புணர்வு சிங்கள வாக்காளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கோத்தாபய ராஜபக்சவின் வெற்றிக்குப் பின்னரான சூழ்நிலைகளும் அமெரிக்காவுக்கு சாதகமானதாக இல்லை.

குறிப்பாக எம்.சி.சி உடன்பாடு விடயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் போக்கு அமெரிக்காவுக்கு திருப்தியைக் கொடுக்கவில்லை.

தற்போதைய அரசாங்கத்தை விட இன்னும் கூடுதல் தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக் கொள்ள முனையும் சஜித் தரப்பையும் நம்பக் கூடிய நிலையில் அமெரிக்கா இல்லை.

ஆக, தெரியாத பேயை விட தெரிந்த பிசாசைக் கையாளுவதே நல்லது என்ற வகையில், கோத்தாபய ராஜபக்ச அரசாங்கத்துடன் முரண்படாமல் இருக்கவே அமெரிக்கா நினைக்கிறது போலும்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் நலன்கள் உள்ள சூழலில், இதனைச் செய்வது அமெரிக்காவுக்கு சுலபமானதாக இருக்கக் கூடும்.

அமெரிக்கா இந்த தேர்தலில் தலையிடுகிறதா - இல்லையா என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை.

இந்தியா- சீனாவைப் பொறுத்தவரையில் நிலைமை வேறுபட்டதாக உள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இங்குள்ள தேவைகள் நலன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், தலையீடுகள் ஆச்சரியம் தரக் கூடியவையன்று.