(ஆர்.யசி)

13ஆம் திருத்த சட்டத்தை பலப்படுத்துவதன் மூலமாக மாகாண சபைகளுக்கு அதியுச்ச அதிகாரங்களை வழங்கி அதன் மூலமாக தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில் நான் உறுதியாகவே உள்ளேன். அதேபோல் தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஏனைய ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் கொடுக்கப்போவதில்லை என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்காக தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு மற்றும் கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்பினை அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என வினவியபோதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை இலங்கையர் என்ற அடையாளத்திற்குள் இருந்து தீர்வு காணவேண்டியது கட்டாயமாகும். அதற்கான முயற்சிகளை சகலரும் முன்னெடுத்தாக வேண்டும். ஆனால் அரசியல் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கைகளை எடுக்க எமது அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதே முக்கியமானது. ஏனைய ஆட்சியாளர்கள் தீர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா என சிந்திக்க வேண்டும். எம்மால் நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும்.

நல்லாட்சியை நம்பி வாக்களித்த தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுத்தோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டது. அதனை மறுக்க முடியாது. ஆனால் அரசாங்கத்தில் எவருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. ஆனாலும் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து நான் மாறவில்லை. இன்றும் அதே நிலைபாட்டில் உறுதியாக உள்ளேன். புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கான முயற்சிகள் ஒரு கட்டத்தில் கைவிடப்பட்டது. ஆனால் புதிய அரசியல் அமைப்பினூடாக தீர்வுகள் மிக உறுதியாக வலியுறுத்தப்பட்டது. எனவே கைவிடப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கில் அதிகார பகிவுகளை வழங்கியாக வேண்டும். அதில் நீண்டகால இழுத்தடிப்பு நிலைமையே உள்ளது. அதேபோல் தமிழர்கள் தனிப்பாதையில் பயணிக்கும் கொள்கைக்கு அப்பால் அவர்களை மத்திய அரசாங்கத்தில் இணைத்துக்கொண்டு சகல இன மத மக்களும் அவர்களின் பிரதிநிதிகளுடன் முன்னோக்கி செல்ல முடியும் என்றால் அது தீர்வுகளை எட்டுவதில் ஆரோக்கியமானதாக அமையும் . இந்த விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்

நல்லாட்சி  நீடித்திருந்தால் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டுவதில் திருப்தியான நிலையொன்று உருவாக்கியிருக்கும். நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை கட்சிகள் சகலருடனும் நாம் பேசினோம். ஒரே நாட்டில் சகலரும் வாழ்க்கூடிய அதிகார பகிர்வை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து பேசினோம். சகலரும் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்தெல்லாம் நாம் பேசி ஒரு நிலைப்பாட்டினை எட்டினோம். ஆனால் இறுதி நேரத்தில் அனைத்துமே குழப்பமடைந்துவிட்டது. இப்போதும் அதனையே நான் கூறுகின்றேன். நிரந்தரமான அரசியல் தீர்வொன்று வேண்டும் என்றால் எமது அரசாங்கத்தை உருவாக்குங்கள். நாங்கள் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக வழங்க தயராகவே உள்ளோம் . தமிழ் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர ஒத்துழைக்க வேண்டும் என்றார்.