(நா.தனுஜா)
நாட்டை முன்னேற்றுவதற்கு இம்முறை பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுத்தருமாறு அரசாங்கம் கோருகின்றது.
அவ்வாறெனின் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் பாராளுமன்ற பெரும்பான்மையும், நிறைவேற்றதிகாரமும் மஹிந்த ராஜபக்ஷ வசமிருந்த போதிலும் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகத் தேர்தலை நடத்திவிட்டு தப்பியோடியது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே,
2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் அதிகமாகப் பேசாததால் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றியடைந்துவிட்டார் என்றும், வாயில் வந்தவாறு நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை வழங்கியமையால் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்துவிட்டார் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாட்டுமக்களுக்குத் தற்போது முக்கியமான இரண்டு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றின் முதலாவது கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையாகும். இத்தகையதொரு நிலையேற்படுவதைத் தவிர்ப்பதற்கான தொற்றாளர்களை இனங்காணும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஆரம்பத்திலேயே ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்திவந்த போதிலும், அரசாங்கம் அதனைக் கவனத்திற்கொள்ளவில்லை. இரண்டாவது பிரச்சினை நாட்டின் பொருளாதாரம் பற்றியதாகும். வியட்நாம் போன்ற சீனாவிற்கு அண்மைய நாடுகளே கொரோனா வைரஸ் பரவலை சீராகக் கட்டுப்படுத்தியது. உண்மையில் இலங்கை ஒரு தீவு என்பதால் நாம் இன்னும் இலகுவாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். எனினும் அரசாங்கம் ஆரம்பத்திலேயே விரைந்து செயற்படாமல் பொதுத்தேர்தலை நடத்தி முடிப்பதையே இலக்காகக் கொண்டிருந்தமையால் பின்னர் சுமார் இரண்ரை மாதங்கள் நாட்டுமக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் முடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் பெருமளவானோர் தமது தொழில்வாய்ப்புக்களை இழந்ததோடு, தத்தமது குடும்பங்களுக்கான வருமான மார்க்கங்களையும் இழந்தனர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சுபீட்சமான நாடொன்றைக் கட்டியெழுப்பும் கொள்கையின் கீழ் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாக ஆளுந்தரப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருந்தது. எனினும் கூறப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டில் நாம் ஆட்சிபீடமேறிய போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டது. அவ்வாறிருந்தும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவாறு 100 நாட்களுக்குள்ளாக பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அரச வருமானத்தை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு மீளச்செலுத்த வேண்டிய கடன் தவணைப்பணத்தையும் செலுத்தி, பொருளாதாரத்தையும் வலுப்படுத்தினோம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் எனது அமைச்சின் கீழ் சமுர்த்திக்கொடுப்பனவு மற்றும் வயது முதிர்ந்தோருக்கான கொடுப்பனவு என்பவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் ஒரு தொகுதியினருக்கு வழங்கப்பட வேண்டிய அந்தக் கொடுப்பனவு கடந்த 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலின் போது இடைநிறுத்தி வைக்கப்பட்டது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் முற்றிலும் சரிந்திருந்த நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியே தூக்கி நிறுத்தியிருக்கிறது.
நாட்டை முன்னேற்றுவதற்கு இம்முறைப் பொதுத்தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுத்தருமாறு அரசாங்கம் கோருகின்றது. அவ்வாறெனின் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் பாராளுமன்றப் பெரும்பான்மையும், நிறைவேற்றதிகாரமும் மஹிந்த ராஜபக்ஷ வசமிருந்த போதிலும் தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகத் தேர்த்லை நடத்திவிட்டு தப்பியோடியது ஏன் என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகின்றோம். அவ்வாறு நடத்திய தேர்தலில் வெற்றிபெற்று, நாம் நாட்டைப் படிப்படியாக முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றபோது தான் மீண்டும் இனவாதத்தையும், பொய்யான வதந்திகளையும் பரப்பி அவர்கள் மக்களை ஏமாற்றிய போது நாமும் மற்றொரு பக்கத்தில் முட்டாள்தனமாக செயற்பட்டோம். சஜித் பிரேமதாஸவைக் களமிறக்கினால் இலகுவாக வெற்றிபெறமுடியும் என்று ஒரு தரப்பினர் கூறினார்கள். எனினும் எமக்கு அப்போது சிங்கள பௌத்த வாக்குகள் குறைவடைந்திருப்பது போன்று தோன்றியதால் நான் கரு ஜயசூரியவையே பரிந்துரைத்தேன். எனினும் அதிகமாகப் பேசாததால் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்துவிட்டார். ஆனால் வாயில் வந்தவாறு நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்துவிட்டார்.
இரண்டாம் உலகமகாயுத்தத்திற்குப் பிறகு நாடு மிகமோசமானதொரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், கட்சிபேதங்களை விடுத்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுப்பதை முன்நிறுத்திச் செயற்பட வேண்டும். எனினும் தற்போதைய அரசாங்கம் அத்தகைய நோக்கில் செயற்படாதது மாத்திரமன்றி, எவ்வாறு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ள முடியும் என்பதை மாத்திரமே மனதிலிருத்திக்கொண்டு செயலாற்றுகின்றது. எனினும் தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM