பாக்தாத்  நகரின் வடக்கு பகுதியில் உள்ள பலாட் என்ற இடத்தில்  உள்ள பள்ளிவாசலை குறிவைத்து நேற்றிரவு  ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு மற்றும் மோட்டார் ரக குண்டுகள் வீசி அடுத்தடுத்து நடத்திய தாக்குதலில்  30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இதனால், அங்கிருந்தவர்கள் பயத்தினால் ஓடிய போது அந்த கூட்டத்துக்குள் புகுந்த இரு தற்கொலைப்படையினர் தங்களது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

மேலும் ஒரு தற்கொலைப்படை தீவிரவாதியை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர், அவனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை செயலிழக்க செய்தனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 50  இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பாக்தாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 292 இற்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றிருப்பது  குறிப்பிடத்தக்கது.