(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தான் தயார் என்றும் அதற்கு நானே பொறுத்தமானவன் என்றும் நவீன் திஸாநாயக்க கூறியுள்ளமை அவரின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது. இது தற்போது அநாவசியமானதொரு கருத்தாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமைத்துவத்தை ஏற்க தயார் என்று நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ,

கட்சி தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் என்று நவீன் திஸாநாயக்க கூறியுள்ளமை அவரது அறியாமையாகும். இது தற்போது தேவையற்ற ஒரு பிரச்சினையாகும். ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை எதுவும் தற்போது ஏற்படவில்லை.

ஒரு குடும்பத் தலைவர் போன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு குடும்பத்தில் அதன் தலைவராக தந்தை இருக்கும் போது அயல் வீட்டிலுள்ள ஒருவரை அந்த குடும்பத்திற்கு தலைவராகக் கொண்டு வர முடியாது.

அதே போன்று ஐக்கிய தேசிய கட்சி என்ற குடும்பத்தின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க காணப்படுகிறார். எனவே தற்போது கட்சி தலைமைத்துவத்திற்கோ அல்லது அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கோ எந்த தேவையும் கிடையாது.

ஒரு குடும்பத்தில் நீண்ட காலமாக தந்தையாக இருப்பவர் சற்று அந்த பொறுப்பிலிருந்து விலகும் போது அவருக்கு அடுத்த நிலையில் இருப்பவரே அடுத்த தலைவராக செயற்படுவார். மாறாக அயல் வீட்டில் வசிப்பவர் அல்ல. அதே போன்று தான் ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவமும்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாம் அனைவரும் எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அறியாமையில் சிலரால் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை என்றார்.