-கபில்

அண்மைக்காலமாக எதிர்த்தரப்பில் உள்ள முக்கிய தலைவர்களை பொது வெளியில் நேரடி விவாதத்துக்கு அழைப்பது அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு “ட்ரென்டாக” மாறியிருக்கிறது.

பகிரங்க விவாதத்துக்கு சவால் விடும் அரசியல்வாதிகளில் அநேகம் பேர், அத்தகைய விவாதத்துக்கு தயாராக இருக்கமாட்டார்கள். ஆனாலும் அழைப்பார்கள். அதுபோல் பலர் சவாலை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராக இருப்பதில்லை. 

பொதுவெளியில் தமது பிரதான எதிரியை குறைத்து மதிப்பிடச் செய்வதற்கான ஒரு உத்தியாகவே, இந்த பகிரங்க விவாதச் சவால் காணப்படுகிறது.

Sajith Premadasa Write Letter To Mahinda Rajapaksa | | TamilTwin ...

அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சஜித் பிரேமதாச பகிரங்க விவாதத்துக்கு அழைத்திருக்கிறார். ஆனால் அதனை பிரதமர் மகிந்த ராஜபக்ச இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதுபோலவே, வடக்கு அரசியல் களத்திலும் அழைப்புகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த அழைப்புகள் ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கின்றன. ஆனால் தேர்தல் முடியும் வரை அத்தகைய பொது விவாதம் ஒன்று நடப்பதற்கான அறிகுறியேதும் தென்படவில்லை.

பகிரங்க விவாதம் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கு இடையில் நடத்தப்படும் நேரடி விவாதம் உலகப் புகழ்பெற்றது.

அத்தகைய பல விவாதங்களில் தான், பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் சமபலத்துடன் மோதிய காலங்களில், நேரடி விவாதம் வெற்றியாளரைத் தீர்மானிப்பதில் பங்களித்து வந்திருக்கிறது.

பொது விவாதத்தின் போது சரியாக பதிலளிக்க முடியாமல் திணறியவர்களும், சரியான திட்டங்களை முன்வைக்கத் தவறியவர்களும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.

அந்த விவாதக் களத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ஜனநாயகத்தில் ஒரு தலைவனைத் தெரிவு செய்யும் போது, அவருக்குரிய முழுத் தகைமைகளையும், அவரது திறமைகளையும் வாக்காளர்கள் அறிந்து கொள்வது முக்கியமானது.

அதனை அடிப்படையாகக் கொண்டது தான் நேரடி விவாதம்.

Democratic National Committee Denies 2020 Climate Change Debate ...

மேற்குலக ஜனநாயகத்தில் பொதுத் தேர்தல்களின் போதும் கூட, சில நாடுகளில் பிரதான கட்சிகளின் தலைவர்களை ஒரே இடத்தில் அமர வைத்து கேள்விகளை எழுப்பி, பொதுவான விடயங்களில் கட்சிகளின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் பகிரங்க விவாதங்கள் நடத்தப்படுகின்றன.

கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலின் போது கூட, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான ஒரு பொதுவிவாதம் நடத்தப்பட்டது.

அந்தப் பொது விவாதத்தில் சஜித் பிரேமதாச, அனுரகுமார திசநாயக்க போன்றவர்கள் பங்கேற்ற போதும், பிரதான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பங்கேற்கவில்லை.

ஏதேதோ காரணங்களைக் சொல்லி அவர் தவிர்த்துக் கொண்டார். பொதுவெளியில் ஊடகங்களையும், விவாதங்களையும் சந்திக்க அவர் தயங்குகிறார் என்றொரு விம்பம் அதனால் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்டது.

ஆனால் அந்த விம்பம் அவரது வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

பொதுவிவாதம் தொடர்பான அவரது ஆளுமைக்கு அப்பால், அவரிடம் சிங்கள பௌத்த வாக்காளர்கள் வேறொரு விடயத்தையே எதிர்பார்த்திருந்தனர்.

அதனால் அவரால் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

இலங்கை போன்ற நாடுகளில் பொது விவாதம் என்ற களம் இன்னமும் வளரவில்லை. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பக்குவம் அரசியல் கட்சிகளுக்கும் வரவில்லை.

அதனால் தான், பொது விவாதத்துக்கு வருமாறு சவால் விடுகின்ற பெரும்பாலான அரசியல்வாதிகளால் அத்தகைய விவாதங்களில் பங்கேற்கும் துணிச்சலும் இருப்பதில்லை.

தமிழ் அரசியல் பரப்பில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் சட்டத்தரணிகளாகவே இருந்தாலும், நேரடி விவாதம் என்றவுடன் அவர்களும் ஓடி ஒளிகின்ற நிலையே காணப்படுகிறது.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் யாழ்ப்பாணத்தில் ஒரு பொது விவாதத்துக்கு அழைப்பு விடுத்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பொறுப்புக்கூறக் கூடிய தலைவர்கள் அந்த விவாத களத்துக்கு அழைக்கப்பட்டனர்.

மூன்று தரப்புகளும் அதற்கு இணங்கி விட்டு, கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டன.

வடக்கு அரசியல் களத்தில் - தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போதும், மிக இலகுவாக அந்த விவாதத்தில் இருந்து விலகி ஓடியிருக்கின்றன மூன்று கட்சிகளும்.

ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தாபய ராஜபக்ச பங்கேற்காத பொது விவாதம் பிசுபிசுத்துப் போனது. 

அதுபோலவே, ஒன்றை ஒன்று சாட்டிக் கொண்டு நழுவியதால் இந்த விவாதமும் நடக்காமல் போய் விட்டது.

மூன்று தரப்புகளும் இணங்கி, சிலரது பெயர்களை அறிவித்திருந்த போதும், கடைசியில் விலகிக் கொண்டது ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்படுத்திய ஏமாற்றத்தை விட வாக்காளர்களான தமிழ் மக்களுக்கே அதிக ஏமாற்றத்தைக் கொடுத்தது.

தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரையில், ஒன்றின் மீது ஒன்று கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றன.

வடக்கு கிழக்கு அரசியல் களத்தில் இவையே பிரதான போட்டியாளர்களாகவும் இருக்கின்றன. ஒரு அணிக்குள் இருந்து பிரிந்து பிரிந்து உருவான கட்சிகள் இன்று மூன்று திசைகளின் நிற்கின்றன.

இவ்வாறான நிலையில் இந்த மூன்றில் எது சரியான தரப்பு, என்று அடையாளம் காண்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது.

இந்தக் குழப்பத்தை போக்கி தமிழ் வாக்காளர்களுக்கு தெளிவை ஏற்படுத்தக் கூடிய ஒரு சந்தர்ப்பமாக பொது விவாதம் போன்றன அமையக் கூடும்.

ஆனால், இந்த மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றின் மீது ஒன்று சாட்டுச் சொல்லி பொது விவாதத்தில் இருந்து நழுவிக் கொண்டது, இவற்றின் பொறுப்புக்கூறும் தகைமையை கேள்விக்குட்படுத்துகிறது.

ஏற்பாட்டாளர்களின் தகவல்களின் படி, ஆரம்பத்தில் இருந்தே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இந்த விவாதத்தில் ஆர்வம்காட்டவில்ல என்று தெரிகிறது. 

சரியான பிரதிநிதிகளைப் பிரேரிக்காமல் இழுத்தடித்து கடைசியில் காரணத்தைக் கூறாமலேயே தப்பியோடியிருப்பதாக தெரிகிறது.

முன்னர் வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் சர்ச்சை தொடர்பாக அப்போது முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனை நேரடி விவாதத்துக்கு அழைத்திருந்தார் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன்.

ஆனால், அந்த சவாலை விக்னேஸ்வரன் ஏற்கவில்லை. தமக்கு சமதையானவருடனேயே பொருத முடியும் என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

அதுபோலவே, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலமும், இந்த விவாதக் களத்தைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தனது கட்சியின் இரண்டு சட்டத்தரணிகளையும் அனுப்பி விட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அவர் நழுவி விட்டார் என்று குற்றச்சாட்டு வந்ததும் செய்தியாளர்களைக் கூட்டி, தான் கட்சித் தலைவர் என்று கூறியிருக்கிறார். அத்துடன் சுமந்திரனுடன், விவாதம் செய்யத தயார் என்றும்  அழைத்திருக்கிறார்.

அதேவேளை, கஜேந்திரகுமார் வராவிடின் தான் வரப்போவதிலை என்று சுமந்திரன் ஒதுங்கிக் கொண்டதை, தமது கட்சியின் சட்டத்தரணிகளான சுகாஸ் மற்றும் காண்டீபனை எதிர்கொள்ள அவர் பயப்படுகிறார் என்று பிரசாரம் செய்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

யாரையும் விவாதத்துக்கு பெயரிடாத தமிழ்த் மக்கள் தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவரான என்.சிறீகாந்தா இந்த விவகாரம் பூதாகாரமாகியதும், சுமந்திரனை விவாதத்துக்கு அழைத்திருக்கிறார்.

இதனைப் பார்த்து, இந்த இரண்டு பேருடனும் விவாதம் செய்ய தானும் தயார், களத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்கிறார் சுமந்திரன்.

ஆக மூன்று தரப்புகளும் இப்போது விவாதத்துக்கு தயார் என்கின்றன. எனினும், அதற்காக மேடை அமைத்துக் கொடுக்கப்பட்ட போது, அதனைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் முன்வரவில்லை.

பயந்தோடி விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே மறைவுக்குள் நின்று கொண்டு சவால் விடுகின்றன தமிழ்க் கட்சிகள்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் பொது விவாதம் குறித்த அச்சம் இல்லையேல், ஏன் பொது விவாதத்தை எதிர்கொள்ள தயங்குகின்றன?

இப்போதும் காலம் கடந்து விடவில்லை. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்கிறது. அதற்குள்ளாக ஒரு நாளில் நேரடி விவாதம் ஒன்றை நடத்தினால், தமிழ்த் தேசியக் கட்சிகளின்  - தலைவர்களின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முடியும்.

இல்லையேல், மறைந்திருந்து சேறடிப்பதும், சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளையும் கொச்சைப்படுத்தல்களையும் முன்வைப்பதும், தான் இவர்களின் இயலுமையாக அடையாளப்படுத்தப்பட்டு விடும்.

அத்தகைய பழியைத் தான் தமிழ்த் தேசியக் கட்சிகள் சுமக்கப் போகின்றனவா?