(நா.தனுஜா)

ஐக்கிய மக்கள் சக்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் எவ்வித கூட்டணியும் இல்லை. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாம் அவர்களுடன் இணைந்து செயலாற்றியிருக்கின்ற போதிலும் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடுகள், குறிப்பாக சமஷ்டி ஆட்சி தொடர்பான அவர்களின் கொள்கைகளுடன் எமக்கு எவ்வித இணக்கப்பாடும் இல்லை என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களுக்குரிய அதிகாரத்தை நீக்கி, அவற்றை பிரதேச சபைகளின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டமை தொடர்பில் அரசியல்சார் பிரச்சினையொன்றுள்ளது. 

ஏனெனில், பெரும்பாலான பிரதேச சபைகள் ஆளுந்தரப்பின் வசமே உள்ளன. அவ்வாறிருக்கையில் அவர்களிடம் பாதைகளுக்கான வழிகாட்டல்களை செயற்படுத்துகின்ற அதிகாரத்தை வழங்கினால், அது நியாயமான தேர்தலொன்று நடைபெறுவதை உறுதிசெய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும். 

இவற்றை சுயாதீன அரச சேவையாளர்களுடன் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் வைத்திய அதிகாரிகள் இணைந்து உரிய கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலைத் தடுப்பதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் வலியுறுத்தியிருக்கின்றது.

பொதுத்தேர்தல் பிரசாரங்கள் மற்றும் ஏனைய தேர்தல் செயற்பாடுகளின் போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான உரிய சட்டதிட்டங்கள், வழிவகைகள் எவையுமில்லை.

தற்போதுவரையில் சமூக இடைவெளியைப் பேணுவதன் ஊடாகவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும். எனினும், அத்தகைய சமூக இடைவெளியைப் பேணுவதற்குரிய விதிமுறைகள், சட்டதிட்டங்கள் என்பவற்றை உச்சபட்சமாக மீறி ஆளுந்தரப்பு செயற்படும் போது ஏனைய தரப்புக்களும் அவற்றை மீறுவதைத் தடுக்கமுடியாத நிலையொன்று ஏற்படும். 

எனவே, சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரின் ஒப்புதலுடன் உரிய சுகாதார விதிமுறைகள் தேர்தல்களுக்கு முன்னரும், தேர்தல் தினத்தன்றும் முறையாகக் கடைப்பிடிக்கப்படக்கூடிய விதத்தில் வர்த்தமானிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரைக் கேட்டுக்கொள்கின்றோம். மாறாக இப்போது வரையில் வைரஸ்தொற்று ஏதோவொரு வகையில் பரவுவதற்கே அரசாங்கம் உதவிக்கொண்டு இருக்கின்றது.

அடுத்ததாகக் கடந்த வாரம் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமொன்றை அடிப்படையாகக்கொண்டு தற்போது துறைமுகம் தொடர்பில் பிரச்சினை எழுந்திருக்கிறது.

கோத்தபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ என்போர் எமது ஆட்சிக்காலத்திலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் நாம் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாகவே அடிக்கடி கூறிவந்தனர். 

அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்வாகத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்க முற்பட்ட வேளையில் இக்குற்றச்சாட்டு அதிகமாக முன்வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி தமது அரசாங்கத்தில் அந்த நிர்வாகத்தை துறைமுக அதிகாரசபையின் கீழ்க் கொண்டுவருவோம் என்றும் கூறினார்கள். 

எனினும், தேர்தலின் பின்னர் துறைமுக நிர்வாகம் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு விட்டதாகவும், அதனை மாற்றியமைக்க முடியாது என்றும் கூறி அரசாங்கம் அதனை அடக்கிவிட்டது.

இந்தச் சம்பவத்தின் உண்மையான பின்னணி என்ன? இந்த துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான திட்டமிடல்கள் தயாரிக்கப்பட்ட காலத்தில் அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தள விமானநிலையம், புத்தளம் அனல்மின்நிலையம் ஆகியவை தொடர்பில் அப்போதைய நிதியமைச்சின் செயலாளராக இருந்த பி.பி.ஜயசுந்தர 2011 ஆம் ஆண்டில் சீனாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தபோது இணக்கப்பாட்டிற்கு வந்ததாகத் தகவல்கள் உள்ளன. 

அப்போது நான் மின்வலுசக்தி அமைச்சராக இருந்தபோதிலும், புத்தளம் லக்விஜய அனல்மின்நிலைய நிர்வாகத்தைச் சீன நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கவிருப்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை. எனினும், அதன் பின்னர் நானாக அப்பதவியிலிருந்து விலகிச்செல்லும் வரையில், என்னை அந்த அமைச்சில் செயற்படவிடாமல் நிதியமைச்சின் ஊடாகப் பல்வேறு இடைஞ்சல்கள் உருவாக்கப்பட்டன. 

அதேவேளை, அம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரத்தில் எமது அரசாங்கத்தின்மீது குற்றஞ்சுமத்தினாலும், எமது அரசாங்கம் ஆட்பீடமேறுவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரேயே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அந்தத் தீர்மானத்தை எடுத்துவிட்டதை குறிப்பிட்டுக்கூற வேண்டும்.

அதேபோன்று இந்தத்துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை சீன மேர்ச்சன்ட் வங்கியிடம் எமது அரசாங்கம் கையளிக்கவில்லை. அதனையும் ராஜபக்ஷ அரசாங்கமே வழங்கியது. 

எனவே, இந்த நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு வழங்கும் செயற்பாட்டை முதலில் ராஜபக்ஷ அரசாங்கமே ஆரம்பித்தது. இது இவ்வாறிருக்க இம்முறைத் தேர்தலில் துறைமுக ஊழியர்கள் மற்றும் 'அனைத்தும் அரசாங்கத்தினாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும்' என்ற இடதுசாரிக்கொள்கை உடையவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகாரசபையிடம் கையளிப்பதாகக் கூறினார்கள். 

இந்நிலையில், மீண்டும் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

துறைமுகத்தின் இரண்டு முனையங்கள் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு வழங்கப்படும் பட்சத்தில் துறைமுகம் நட்டமடைய நேரிடும். எனவேதான், இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தித் துறைமுக ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். 

எமது அரசாங்கத்தில் இதனை வெளிநாட்டுக்கம்பனிக்கு வழங்கமாட்டோம் என்று உறுதியளித்த போதிலும், 2019 ஆம் ஆண்டு முடிவில் சாகல ரத்நாயகவினால் அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டு ரணில் விக்கிரமசிங்கவும் சில உடன்பாடுகளுக்கு வந்துவிட்டார். எனினும் அந்த அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு இருக்கமுடியாது.

ஏனெனில், நல்லாட்சி அரசாங்கம் தவறாக செயற்படுவதாகவும், அவற்றை சீரமைப்பதாகவும் கூறிக்கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறியது. எனவே, மீண்டும் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கம்பனிகளுக்கு வழங்குவதைத் தடுப்பதே அரசாங்கம் செய்யவேண்டிய விடயமாகும். 

அதனைவிடுத்து மீண்டும் அதனை வெளிநாட்டுக் கம்பனிக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதென்பது துறைமுக ஊழியர்களையும், நாட்டுமக்களையும் ஏமாற்றும் செயற்பாடாகும்.

அதுமாத்திரமன்றி தற்போது புத்தளம் லக்விஜய அனல்மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்வாகத்தையும் வெளிநாட்டுக்கம்பனி ஒன்றிடம் கையளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. 

எதிர்வரும் காலங்களில் நாட்டின் அநேகமான தேசிய சொத்துக்களுக்கு நேரப்போகின்ற நிலை இதுதான். இவ்வாறு நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு வழங்குகின்ற அனுமதிகளில் கையெழுத்திட்டுவிட்டு, தேசியவளங்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவோம் என்று மக்களை ஏமாற்றும் விதமாக ஜனாதிபதி பேசுகின்றார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் ஒன்றாக இருக்கின்றன என்று ஆளுந்தரப்பு முன்வைக்கும் விமர்சனம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் இவ்வாறு பதிலளித்தார்:

எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் எவ்வித கூட்டணியும் இல்லை. ஆனால், வெவ்வேறு அரசியல் தேவைகளினபோது நாம் அவர்களுடன் இணைந்து செயலாற்றியிருக்கின்றோம். 

உதாரணமாகப் பாராளுமன்றத்தைக் கலைப்பதில் அவர்களுடன் இணைந்து செயற்பட்டோம். ஏனெனில், அது ஓர் அரசியல் விவகாரம் என்பதுடன், அவர்கள் ஜனநாயக ரீதியாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியிருக்கின்றார்கள். 

ஆனால், அவர்களுடைய ஏனைய அரசியல் நிலைப்பாடுகள், குறிப்பாக சமஷ்டி ஆட்சி தொடர்பான அவர்களின் கொள்கைகளுடன் எமக்கு எவ்வித இணக்கப்பாடும் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ எம்முடைய கொள்கைப் பிரகடனத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனத்தையும் சரியாக வாசிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கூட்டணியில் யார் இருக்கின்றீர்கள்? நாட்டைப் பிரிக்கவேண்டும் என்று ஆயுதமேந்திப்போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர்கள் அவர்கள் தரப்பில் அல்லவா இருக்கின்றார்கள்? விநாயகமூர்த்தி முரளிதரன், குமரன் பத்மநாதன் மற்றும் கடந்த காலத்தில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைவரும் ராஜபக்ஷ தரப்பினரின் வெற்றிக்காகவே உழைக்கின்றனர். 

அவ்வாறிருக்கையில் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குற்றஞ்சொல்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டில் எவ்வித தாக்குதல்களையும் நடத்தியதில்லை. ஜனநாயக ரீதியாகவே தமது கொள்கைப் பிரகடனத்தில் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். 

கொவிட் - 19 பரவல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பினரையும் தனியாக சந்தித்துப் பேசியிருக்கிறார் எனின், அவர்களுடன் என்ன பேசப்பட்டது என்று நாமும் கேள்வி எழுப்பமுடியும் என்றார்.