(செ.தேன்மொழி)

இணையம் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு சலுகைக் கடன்களை பெற்று தருவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே நேற்று ஞாயிற்றுக் கிழமை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபர்கள் இணையம் ஊடாக சலுகை அடிப்படையில் கடன் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்து , வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நபர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளனர். பின்னர் அவர்களுக்கு இலங்கையில் காணப்படும் வங்கி கணக்குகளின் விபரங்கள் தொடர்பில் அறிந்துக் கொண்டு, அந்த கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தை மோசடியான முறையில் கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு 5 இலட்சம் ரூபாய் பணத்தை சந்தேக நபர்கள் மோசடி செய்துள்ளதாக பெண்ணொருவர் கிருளப்பனை பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இவர்கள் போலி ஆவணங்கள் மற்றும் சாரதி அனுமதி பத்திரங்களையும் தயாரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பிடபெத்தர - நாரஹேன்பிட்டி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 - 46 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மடிக்கணணி , வங்கி அட்டை, 925 சாரதி அனுமதி பத்திரம் தயாரிக்க பயன்படுத்தும் அட்டைகள், இரு இறப்பர் முத்திரைகள் ,61 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், 5 சர்வதேச ரீதியிலான சாரதி அனுமதிப்பத்திரங்கள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக கார் , வேனையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருளபனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.