-என்.கண்ணன்
இரண்டு வாரங்களுக்கு முன்னர், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான ரமேஷ் பத்திரன நாட்டின் பொருளாதார நிலை தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
ஜூன் மாதத்தில் இறக்குமதிகள் 961 மில்லியன் டொலராக குறைந்திருப்பதாகவும், ஏற்றுமதிகள் 1020 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகம் என்றால் அது பொருளாதார முன்னேற்றத்தின் அறிகுறி தான்.
அதனை வைத்துத் தான் அவர், இறக்குமதிகளை விட ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளது என்றும் இதனால் குறுகிய காலத்துக்குள் நாடு பொருளாதார ரீதியாக உறுதியான நிலையை அடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இறக்குமதிகளில் தங்கியிருக்கின்ற நிலையில் இருந்து, உள்நாட்டு உற்பத்திகளில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தப் போவதாக கூறியிருந்தது.
அந்த இலக்கில் அரசாங்கம் முன்னேறியிருக்கிறது என்று காண்பிக்கவே முயன்றிருக்கிறார் அமைச்சர் ரமேஷ் பத்திரன. ஆனால் உண்மை நிலை அதற்கு எதிர்மாறானது.
ஒரு ஓட்டப் பந்தயத்தில் எத்தனையாவது ஆளாக வருவது என்பதைவிட, எத்தனை பேருன் ஓடி முன்னிலை இடத்தை பிடிப்பது என்பது தான் முக்கியமானது. மூன்று பேர் பங்கேற்ற ஒரு ஓட்டப் போட்டியில் மூன்றாவதாக வருவது பெருமைக்குரிய விடயமல்ல.
இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி விட்டு, ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்வதும் அதுபோலத் தான்.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தது. குறிப்பாக கொரோனா தொற்றுப் பரவலை அடுத்து, நிலைமை இன்னும் மோசம் அடைந்தது.
வெளிநாட்டு நாணயக் கையிருப்பு தேய்ந்து போனது. இதனைச் சமாளிக்க இந்தியா சீனா போன்ற நாடுகளிடம் கடன் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை
இவ்வாறான நிலையில் கையிருப்பில் உள்ள வெளிநாட்டு நாணயங்களை தொடர்ந்தும் வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காக, அரசாங்கம் இறக்குமதிகள் மட்டுப்படுத்தியது.
அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னரே கொடுப்பனவை செலுத்தக் கூடிய இறக்குமதியாளர்களுக்கு மாத்திரமே அரசாங்கம் அனுமதி அளிக்கிறது.
மொத்தத்தில் இறக்குமதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், இறக்குமதி செலவினம் கடந்த ஜூன் மாதத்தில் குறைந்து போயிருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல.
2018 ஆம் ஆண்டு இதே ஜூன் மாதம் இறக்குமதிக்காக 1819 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டிருந்தது.
சரியாக ஒரு ஆண்டு கழித்து, 2019 ஜூன் மாதத்தில், இறக்குமதிகள் 1400 டொலர்களாக குறைந்திருந்தது.
எனவே இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இறக்குமதிகள் 961 மில்லியன் டொலர்களாக குறைந்திருப்பதை, கடந்த மூன்று ஆண்டுகளில் இறக்குமதி செலவு குறைந்து வருவதன் தொடர்ச்சியாக கருத முடியுமா அல்லது, தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் விளைவாகப் பார்க்க முடியுமா அல்லது, அண்மையில் இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளின் பிரதிபலிப்பாக பார்க்க வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது.
மறுபுறத்தில் ஏற்றுமதி வருவாய் அதிகரித்திருப்பதாக கூறப்படும் செய்தியின் உண்மைத்தன்மையையும் பார்க்க வேண்டும்.
2018 ஜூன் மாதத்தில், 1024 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயாக கிடைத்திருந்தது. 2019 ஜூனில், ஏற்றுமதி வருவாய் 1084 மில்லியன் டொலர்களாக அதிகரித்திருந்தது. இது கிட்டத்தட்ட 5.8 வீத வளர்ச்சி.
இந்த ஆண்டில் கொரோனா தொற்று போன்ற காரணங்களால் வளர்ச்சி ஏதும் இல்லாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம், கடந்த ஆண்டின் இலக்கையாவது எட்டியிருக்க வேண்டும்.
ஆனால், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 64 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாய் குறைவாகத் தான் கிடைத்திருக்கிறது,
இதுதான் தற்போதைய அரசாங்கம் கூறுகின்ற உறுதியான வளர்ச்சியின் அடையாளமா?
2018இல் வர்த்தக இடைவெளி -795 மில்லியன் டொலர்களாக இருந்தது, 2019இல் அது -316 மில்லியன் டொலர்களாக குறைந்தது. தற்போது, வர்த்தக இடைவெளி +59 மில்லியன் டொலர்களாக மாறியிருக்கிறது.
இது தவிர மற்றைய விடயங்களில் பொருளாதார முன்னேற்றமாக எதையும் கூற முடியாது.
போட்டிச் சந்தையில் இருந்து விலகி, மூடிய சந்தைக்குள் நாட்டைக் கொண்டு செல்வதன் மூலம், பொருளாதார அபிவிருத்தியை எட்டலாம் என்று அரசாங்கம் கருதுகிறது.
குறுகியகால நோக்கில் இவ்வாறான தடைகளின் மூலம், பொருளாதாரம் வளர்ச்சி காண்பதாக கூறலாமே தவிர, நீண்டகால நோக்கில் அவ்வாறு கூறக் கூடியது அல்ல.
ஏற்றுமதிகளை அதிகரித்து, இறக்குமதிகளை கட்டுப்படுத்தி பொருளாதார வளர்ச்சியை அடைய முனையும் போது, மக்களும் நாடும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் நாட்டு மக்களின் நுகர்வு கலாசாரம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. உணவு, உடை உள்ளிட்ட பழக்கவழக்கங்கள் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளன.
அந்தப் பழக்க வழக்கங்களை அடியோடு மாற்ற முனையும் போது, அரசாங்கம் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்கும்.
அரிசி உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளதாகவும், அதனால் கோதுமை இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் விவசாய தொழிற்சங்க தலைவர் ஒருவர் அண்மையில் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கோதுமையின் தேவை மற்றும் பயன்பாட்டை அரிசியினால் முழுமையாக ஈடுசெய்ய முடியாது. அவ்வாறு தடை செய்தால் கோதுமையை அடிப்படையாக கொண்ட தொழில்கள் பாதிக்கப்படும். அதனை நம்பியிருப்போர் நடுத்தெருவுக்கு வருவார்கள்.
அதைவிட இன்றும் ஒரு நேரமோ இரண்டு நேரமோ பாணை மட்டுமே உணவாக நம்பியிருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் கொதிப்படைவார்கள். இதுபோன்ற பல சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்.
சோளம் இறக்குமதிக்கு விதிக்கப்படட தடையால், கால்நடைத் தீவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது, கால்நடை உற்பத்திகளில் பெரும் தாக்கம் செலுத்துவதுடன் அது சார்ந்த உற்பத்திகள் சாதாரண மக்களுக்கு கிடைக்காத நிலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. திட்டமிடப்படாத பொருளாதார கொள்கையின் விளைவே இது.
இது நீண்டகால நோக்கில் மக்களையும் நாட்டையும் மட்டுமன்றி ஆட்சியாளர்களையும் நெருக்கடிக்குள் தள்ளும்.
வெளிநாட்டு நாணயக் கையிருப்பை பாதுகாக்க இறக்குமதியை தடைசெய்துள்ள அரசாங்கம் அந்த உண்மையை மறைக்க தேசியவாதம் பேசுகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தற்காலிகமானது தான் என்றும், இதனை வைத்துக் கொண்டு மூடிய பொருளாதாரத்துக்குள் செல்ல இலங்கை முடிவு செய்திருப்பதாக கருத வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மூடிய அல்லது தற்சார்பு பொருளாதாரத்தை செயற்படுத்தும் உறுதியான முடிவில் இருந்தால், ஜனாதிபதி ஏன் இவ்வாறான விளக்கத்தை வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு கொடுக்க வேண்டும்?
பல்வேறு நாடுகளுடன் இலங்கை இரு தரப்பு வர்த்தக உடன்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு அல்லது தடை விதிப்பது, அத்தகைய இருதரப்பு உடன்பாடுகளுக்கு எதிராகவே இருக்கும்.
இறக்குமதிகளை முற்றாக கட்டுப்படுத்தும் முடிவை அரசாங்கம் எடுத்தால், அது இருதரப்பு உடன்பாடுகளை பாதிக்கும். அவ்வாறான நிலையில் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கும் குறித்த நாடுகள் தடைவிதிக்கும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், நாட்டின் ஏற்றுமதி வருவாயும் பாதிக்கப்படும்.
“நீண்டகால இறக்குமதி தடை நீடித்தால், உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக இலங்கை இருப்பது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று ஜேர்மனியின் இலங்கைக்கான தூதுவர் ஜோர்ன் ரொட்ஸ் கூறியிருக்கிறார். ஆக, இந்த விவகாரம் முள்ளில் விழுந்த சேலை மாதிரி.
இதனை அரசாங்கம் கவனமாக கையாள தவறினால் அது மக்களின் வயிற்றில் அடிக்கும். மக்களின் வயிற்றில் அடிக்கும் எத்தகைய முடியும், அரசாங்கத்துக்கும் ஆபத்தையே கொண்டு வரும். அத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறதா?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM