(க.பிரசன்னா)

கட்சியின் உண்மை கொள்கை திட்டத்தை அறிந்தவர்கள் கட்சியை விட்டு விலகவில்லை. கட்சியில் வாடகைக்கு இருந்தவர்களே சென்றுள்ளனர். பாட்டலி சம்பிக்க ரணவக்க வாடகைக்கு இருந்தவர். அவர் ஹெல உறுமயவைச் சேர்ந்தவர். சஜித் பிரேமதாஸ நல்லவர். அவருக்கு பொறுமையில்லை. அவர் ஐ.தே.க.வில் இருந்திருந்தால் 2025இல் அவரே ஜனாதிபதியாக வந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தை அவர் இல்லாமல் செய்துவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஜந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

அவருடனான நேர்காணல் வருமாறு:


பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கான காரணம் என்ன? கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனித்தே போட்டியிட்டிருந்தீர்கள்?

இலங்கையில் இருக்கின்ற பிரச்சினைகளை கவனத்தில் கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்திருந்தேன். எமது நாட்டிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுன்றத்தில் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டார்கள். மோசமான வார்த்தைகளில் பேசினர். அதனால் மக்கள் நேர்மையானவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பவே தேர்தலை நடத்துகின்றனர். நமது நாட்டில் ஒழுக்கமில்லாதவர்களே பாராளுமன்றம் செல்கின்றனர். கொள்ளக்காரர், குடு விற்பவர், மதுபானசாலைகளை நடத்துபவர், மக்களுக்கு பொய் கூறுபவர்களே ஆட்சி செய்வதற்காக பாராளுமன்றம் செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களுக்கு அரசியலமைப்பு பற்றி தெரிவதில்லை. அவர்களால் தெரிந்து கொள்ளவும் முடியாது. அவ்வாறானவர்களே தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்கின்றனர்.

எமது நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களுக்கு அரசாட்சி தொடர்பில் தெரியவில்லை. அதிகமான மக்கள் கஷ்ட சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தொடர்மாடிகளில் வசிக்கும் பலருக்கு ஆட்சி தொடர்பில் ஒன்றும் தெரியாது. அரிசி கொடுப்பவர்களுக்கும் மரண வீடுகளுக்கு செல்பவர்களுக்குமே வாக்களிக்கின்றனர். சிலர் அவர்களுடைய இனத்தவருக்கு மட்டுமே வாக்களிக்கின்றனர். இதனால் யாருக்கும் பிரயோசனமில்லை. கடன் வாங்கியே ஜீவிக்கின்றனர். யாருக்கு புள்ளடியிட வேண்டுமென்று இவர்களுக்குத் தெரியவில்லை.

நான் மிக நீண்டகாலம் அமைச்சில் பணியாற்றியிருக்கின்றேன். அரசாங்கத்தை எவ்வாறு நிர்வகிக்க வேண்டுமென்று எனக்கு தெரியும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை விட சிறந்த நிர்வாகத்தை மேற்கொள்ள முடியும். அதனாலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். இந்நாட்டு மக்கள் பிரதான இருகட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்கின்றனர். வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை.

நான் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவே பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிடுவதற்கு அழைத்தார். நான் பல மாதங்கள் யோசித்த பின்பே தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். என்னை வேறு கட்சிகளிலிருந்தும் தொடர்பு கொண்டார்கள். எனக்கு வேறு கட்சிகளில் போட்டியிடுவதற்கு விருப்பமில்லை.

 வேறு கட்சிகளை தெரிவு செய்யாததற்கான காரணம் என்ன?
இன்று இலங்கையில் இடதுசாரி கட்சிகள் முதலாளித்துவத்துக்கு எதிராக பேசுவார்கள். இவர்களுக்கு கதைக்க மட்டுமே முடியும். அவை அழகான கதைகள். மொட்டுக் கட்சியினர் பிரிவினைவாதம் கொண்டவர்கள். சஹ்ரான், பிரபாகரன், கருணா அம்மான் தொடர்பிலேயே எந்நேரமும் கதைப்பார்கள். அதுவல்ல நாட்டை கட்டியெழுப்புவது. இவர்களுக்கு ஒவ்வொரு மதகுருக்களை அழைத்து வருவதே வேலை. இது பெரிய பிரச்சினை. அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியாது. ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பழைமையான கட்சி. அக்கட்சியை டி.எஸ்.சேனநாயக்க தமிழ், முஸ்லிம், சிங்களவர் என அனைவரையும் ஒன்றிணைத்தே ஆரம்பித்தார். சஜித் பிரேமதாஸ பிக்குகளை இணைத்து கொண்டதால் பௌத்த மதம் தொடர்பில் மட்டும் பேசமுடியாது. இன்று ரணிலை பௌத்தரா என்று கேட்கின்றனர். அவர் தலைமை வகிக்கும் கட்சியில் சகல மதத்தவரும் இனத்தவரும் இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரிவினைவாதத்தை கொண்டுவர முடியும். அதற்கு ஒரு அடிதளம் இல்லையே. 

அவ்வாறெனின், பிக்குகள் அரசியல் செய்யக்கூடாதென கூறுகின்றீர்களா?
ஆம், பிக்குகள் அரசியல் செய்ய வேண்டியத் தேவையில்லை. அவர்கள் அரசியல் செய்ய வேண்டியவர்கள் அல்ல. மத கடமைகளை செய்ய வேண்டியவர்கள். கோவிலில் பூஜை செய்பவர்களோ, பள்ளிகளில் ஓதுபவர்களோ, கிறிஸ்தவ பாதிரியார்களோ வாக்கு கேட்பது இல்லையே. கிறிஸ்தவ மதத்தை எடுத்துக்கொண்டால் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு வருபவர்கள் கொடுக்கின்ற பணத்திலேயே அவர்களுக்கு சம்பளம் கிடைக்கின்றது. அந்த பணத்தை பெற்றுக்கொண்டு ஜீவிக்காமல் எப்படி வாக்கு கேட்க முடியும்.

 ஐ.தே.கட்சி தற்போது பிளவுபட்டல்லவா இருக்கின்றது. இந்நிலையில் உங்களுக்கு வெற்றி பெறும் நம்பிக்கை இருக்கின்றதா?கட்சியின் உண்மை கொள்கை திட்டத்தை அறிந்தவர்கள் கட்சியை விட்டு விலகவில்லை. கட்சியை பற்றி தெரியாதவர்களும் கட்சியை சாராதவர்களுமே கட்சியை விட்டுச் சென்றுள்ளனர். கட்சியில் வாடகைக்கு இருந்தவர்களே சென்றுள்ளனர். பாட்டலி சம்பிக்க ரணவக்க வாடகைக்கு இருந்தவர். அவர் ஹெல உறுமயவைச் சேர்ந்தவர். சஜித் பிரேமதாஸ நல்லவர். அவருக்கு பொறுமையில்லை. அவர் ஐ.தே.க.வில் இருந்திருந்தால் 2025இல் அவரே ஜனாதிபதியாக வந்திருப்பார். அந்த சந்தர்ப்பத்தை அவர் இல்லாமல் செய்துவிட்டார். அவர் மக்களுக்கு வேலை செய்து கட்சியை சிறப்பாக வழிநடத்தியிருந்தால் முன்னோக்கி வந்திருக்கமுடியும். சம்பிக்க, பதியுதீன் போன்றோரே புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் உசுப்பேற்றியிருக்கின்றனர். பிளவுபட்டதால் ஐ.தே.க. தோல்லியடையமென நம்பவில்லை. கொழும்பு மாவட்டத்தில் சஜித்தை விட ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிக ஆதரவு இருக்கின்றது. அதனால் எங்களின் வெற்றிக்கு பெரிய பாதிப்பு ஏற்படாது.  

நீங்கள் வெற்றிபெற்றவுடன் பெண்களுக்காக எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளீர்கள்?
நானே 20 வருடங்களின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே ஒரே ஒருபெண் வேட்பாளர். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்க கதைக்கும் போது, பெண்களுக்காக வேலை செய்யும் ஒருவர் இல்லையென கூறியிருந்தார். எனவே கட்சியில் பெண் வேட்பாளர்களை அதிகரிக்க வேண்டுமென கூறியிருந்தார். அவரே பிரதேச மட்டத்தில் பெண்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டை கொண்டுவந்திருந்தார். பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல். இலங்கையிலேயே தொழில் வாய்ப்பினை அதிகரித்து வெளிநாட்டு பணிப்பெண்களாக அனுப்புவதை தடுக்க வேண்டும். அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்.

பெண்களுக்கு எதிரான வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் பல மடங்கு அதிகரித்து வருகின்றது. அதற்கு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தார். என்னை பொறுத்தமட்டில் சிறுவர் துஷபிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவே இந்த சட்டம் செயற்படுத்தப்படவேண்டும். அதற்கான முழு முயற்சியையும் நான் பாராளுமன்றத்துக்கு தெரிவான பின்னர் முன்னெடுப்பேன்.

தேர்தல் பிரசாரத்தில் மக்களிடம் கொண்டு செல்லும் வாக்குறுதிகள் என்ன?
நான் அதகமான வாக்குறுதிகளை கொடுப்பதில்லை. தொழி;ற்சாலைகளை அபிவிருத்தி செய்தல். இணையவழி கல்வி முறையை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளேன். நான் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இருக்கும்போது கடதாசி தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தேன். அதனை இதுவரையிலும் தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளது. இதுபோன்ற தொழிற்சாலைகளை அதிகரிப்பதனூடாக பல இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க முடியும். அதனூடாக எமது தேசிய உற்பத்திகளையும் அதிகரிக்கலாம். அதனால் நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையவழி கல்வியை மேம்படுத்துவதினூடாக பல பிரதேசங்களுக்கு தொழில்நுட்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அது தொடர்பில் அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதுடன், இலவசமாக வைபை பெற்றுக்கொடுப்பதற்கும் கட்சி தலைவருடன் கலந்துரையாடியுள்ளேன்.


கொழும்பு மாவட்டத்தில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு விசேட தீர்வு இருக்கிறதா?
குப்பைகளை மீள்சுழற்சி செய்யும் திட்டத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது நானே. அதனால் அது தொடர்பில் எனக்கு போதிய விளக்கம் இருக்கின்றது. கொழும்பு நகர்புறங்களில் காணப்படும் தோட்டத்திலுள்ள வீடுகளே அந்நகரத்துக்கு பொருத்தமற்றதாகும். அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொடர்மாடி குடியிருப்புக்கள் சகல வசதிகளுடனும் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அமைக்கப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை சுற்றிலும் கப்பைகள் அதிகரித்துள்ளது. அவற்றை அவ்விடங்களில் இருந்து அகற்றி மீள்சுழற்சி செய்வதற்கு நடவடிக்கையெடுப்பதுடன் தொடர்ந்தும் அப்பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதற்கு அவதானம் செலுத்துவேன்.