யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியில் பகலில் வீட்டின் கூரையை பிரித்து கொள்ளை முயற்சியல் ஈடுபட்ட நாபரை ஊர் மக்கள் இணைந்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குப்பிளான் தெற்குப் பகுதியில் வேலை, நபர் ஒருவர் வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்ற சமயம் பார்த்து வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கொள்ளையிட முயன்றுள்ளார்.

இந்நிலையில் இதனை, வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தரொருவர் கண்டு குறித்த வீட்டிற்கு அயலில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த கிராமவாசிகள் பலர் மேற்படி பகுதியில் திரண்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்களும் தகவலறிந்து அங்கு வந்த நிலையில் அனைவரும் இணைந்து குறித்த நபரை பிடிப்பதற்கு முயன்றுள்ளனர்.

எனினும், கொள்ளையில் ஈடுபட்ட நபர் வீட்டின் பின் கதவைத் திறந்து தப்பியோட முயன்ற போது அப்பகுதியில் நின்றிருந்த சில இளைஞர்கள் இணைந்து குறித்த நபரை விரட்டிச் சென்றுள்ளனர். சுமார் ஒரு கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய வளாகத்துக்குள் வைத்து கொள்ளைக்காரரை மடக்கிப் பிடித்தனர்.

மடக்கிப் பிடிக்கப்பட்ட கொள்ளைக்காரன் கட்டி வைக்கப்பட்டு  சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டான். குறித்த கொள்ளையனிடமிருந்து மேற்படி வீட்டில் திருடப்பட்ட கைத்தொலைபேசியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

மடக்கிப் பிடிக்கப்பட்ட கொள்ளையன் மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த சுமார்  25 வயதான இளைஞன் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த கொள்ளையன் மடக்கிப் பிடிக்கப்பட்டமையால் பெரும் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.