( எம்.எப்.எம்.பஸீர்)

தொலைக்காட்சி ரியலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சிறுவர்கள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்,  தொலைக்காட்சி மேடை வடிவமைப்பாளர் என கருதப்படும், பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொள்ளுப்பிட்டி பொலிஸாரும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று நுகேகொட - கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். 

இதன்போது அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த நபரால்  20 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள்  பல்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

 அவ்வாறு சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் குறித்த நபர், அதனை வீடியோ படமெடுத்துள்ளமையும், சில வீடியோக்கள் ஆபாச வீடியோ காட்சிகளைப் போன்று சிறுவர்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

 இந் நிலையிலேயே 54 வயதான குறித்த நபரை கைது செய்த பொலிசார், மேலும் சிலரை கைது செய்ய விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.