இந்தியா தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தில் இருந்து மீன்பிடிக்காக பத்து மீனவர்களுடன் நாகபட்டிணம் சென்ற ஒரு விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இப்படகில் இருந்த 4 மீனவர்களை இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் மீட்டுள்ளனர். எஞ்சிய 6 மீனவர்களை நாட்டு படகு மூலம் மீட்டு பாம்பன் மீன் பிடி துறைமுகத்துக்கு அழைத்து சென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தில் இருந்து நேற்றிரவு விசைப்படகு ஒன்றில் 10 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக  பாம்பன் தர்கு பாலம் வழியாக நாகபட்டிணம் சென்றுள்ளனர். 

 

மீனவர்கள் பாம்பன் பகுதியை நெருங்கிய போது  பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்று கொண்டிருந்த போது  படகு ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பாறையின் மீது மோதியுள்ளார். இதனால் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இந்நிலையில், 10 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ள நிலையில் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாட்டு படகு மீனவர்கள் இந்திய கடற்படைக்கு  தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த, இந்தியக் கடற்படை வீரர்கள்  ஹெலிகொப்டர் மூலம் 4 மீனவர்களை மீட்டனர். எஞ்சிய ஆறு மீனவர்களை சக மீனவர்கள் நாட்டுபடகில் பத்தரமாக மீட்டு பாம்பன் தெற்கு  மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனையடுத்து இந்திய கடலோர காவல்படையில் உள்ள மருத்துவகுழு மீனவர்களுக்கு  மருத்துவ முதலுதவி அளித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.