ஆட்சியாளர்களுக்கு சமஷ்டி தீர்வளிக்கும் நிர்ப்பந்தம் ஏற்படும் : த.ம.தே.கூவின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் விக்கினேஸ்வரன் பிரத்தியேக செவ்வி

26 Jul, 2020 | 01:07 PM
image

(நேர்காணல்: ஆர்.ராம்)

உரிய பூகோள அரசியல் சூழல் ஏற்படும் போது ராஜபக்ஷ உட்பட எந்த ஆட்சியாளர்களும் கட்டாயமாக சமஷ்டி தீர்வு பற்றி பேச நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அத்துடன் இந்த நாட்டில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் சமஷ்டி பற்றிப் பேசித்தான் ஆகவேண்டும் என்று வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், அதன் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

கேள்வி:- வடமாகாணசபையின் கடந்த தேர்தலின் போது கூட்டமைப்பாக இணைந்து மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமாறு கோரியதால் அரசியலுக்குள் வந்ததாக கடந்த காலத்தில் தெரிவித்த நீங்களே பிளைவடைந்து தனி அணியை உருவாக்கி விட்டீர்களே?

பதில்:- சுயநல அரசியல் நடைபெறும் வரை, அரசியலை சுயநல காரணங்களுக்காகப் பாவிக்க அரசியல்வாதிகள் தீர்மானம் எடுத்திருக்கும் வரை, அரசியலை ஒரு பணம் சேர்க்கும் தொழிலாக அரசியல்வாதிகள் பார்க்கும் வரை நேர்மையான உண்மையான அரசியல் அரங்கேறாது. நாங்கள் ஐக்கியத்தை நோக்கிச் செல்ல மற்றவர்கள் சுயநலத்தை நோக்கிப் பயணித்தால் ஒற்றுமையும் ஐக்கியமும் எவ்வாறு ஏற்படும்? அரசியல் என்பது ஒரு புனிதமான கடப்பாடு என்ற எண்ணம் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஏற்படவேண்டும்.

கேள்வி:-உங்களை அரசியலிற்கு அழைத்து  வந்த கூட்டமைப்பின் முதுகில் நீங்கள் குத்திவிட்டதாகவே கூறப்படுகின்றமைக்கு தாங்கள் தரும் விளக்கம் என்ன?

பதில்:- குத்தப்பட்டது நான். இது தான் தேர்தல் விஞ்ஞாபனம், இதை நோக்கித்தான்; நாங்கள் செல்லப் போகின்றோம் என்று கூறிவிட்டு என்னை அழைத்துச் சென்று என்னையும் தம்முடன் சுயநல அரசியலுக்குள் தள்ளப்பார்த்தார்கள். அதற்கு உடன்படாததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இளைய சமுதாயம் என்னைக் காப்பாற்ற முன்வராதிருந்தால் நான் வீடு சென்றிருப்பேன். இளைஞர்கள் என்னைக் காப்பாற்றவும் நான் அவர்களுக்கு “உங்களுடன் நான் இருப்பேன்” என்று வாக்குக் கொடுக்கவும் போய், இன்று நான் என் ஓய்வைத் தியாகம் செய்துவிட்டு நிற்கின்றேன். ஆனால் நேர்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதால் மன ஆறுதல் அடைகின்றேன்.


கேள்வி:-
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரையின் பிரதான அம்சங்களை குறிப்பிடுங்கள்?

பதில்:- கொள்கை ரீதியிலான மிகப்பெரிய கூட்டணி எமது கூட்டணியாகும். அரசியலில் தன்னாட்சி பெற எடுக்கப்போகும் நடவடிக்கைகள், சமூக ரீதியாக தற்சார்பான நடைமுறைகள், பொருளாதாரத்தில் எம்மை நாமே தன்னிறைவு கொள்ள எடுக்கப் போகும் முயற்சிகள் ஆகியவற்றை நாம் வலியுறுத்தியுள்ளோம். இவற்றை விட எமது நிலம்,புலம் ஆகியவற்றை இணைத்த நிறுவன ரீதியான செயற்பாட்டு முறைமையை நாம் தேர்ந்துள்ளதை விளக்கியுள்ளோம். 

கேள்வி:- இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு நடைமுறைச்சாத்தியமாகுமா?

பதில்:- சிங்கள மக்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்படும் போது, அவர்கள் தமது சரித்திரத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் போது, சுற்றுச்சூழல் சக்திகள் சிங்கள அரசியல்வாதிகளுக்கு நெருக்குதல்களை ஏற்படுத்தும் போது மற்றும் பூகோள அரசியல் எமக்கு சாதகமாக மாறும் போது சாத்தியமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இனப்படுகொலைக்கான பரிகார நீதியை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலம் பெறும்போதும் பொருளாதாரத்தில் நாம் வலுவான நிலையை அடைகின்றபோதும் இது சாத்தியமாகும்.

கேள்வி:- 13, 19ஆவது திருத்தங்களை மறுசீரமைப்புச் செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு மக்கள் ஆணை கோரும் ராஜபக்ஷ சகோதரர்களிடத்தில் சமஷ்டி பற்றி பேசுவதற்கு வாய்ப்புக் கிட்டுமெனக் கருதுகின்றீர்களா?

பதில்:- உடனடியாக இல்லை.  ஆனால், உரிய பூகோள அரசியல் சூழல் ஏற்படும் போது ராஜபக்ஷ உட்பட ஆட்சியாளர்கள் கட்டாயமாக சமஷ்டி பற்றி பேச நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அத்துடன் இந்த நாட்டில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றால் அவர்கள் சமஷ்டி பற்றிப் பேசித்தான் ஆகவேண்டும். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் சமஷ்டி தீர்வின் அடிப்படையில் தீர்வினை காணுவதற்கு இணங்கி இருந்தன என்பதையும் நாம் மறந்துவிடக்க்கூடாது.

கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது அடுத்துவரும் அரசுக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று கூறியுள்ள நிலையில் உங்களது நிலைப்பாடு என்னவாகவுள்ளது?

பதில்:- புதிய அரசியல் அமைப்பு என்பது காலங்கடத்தும் ஒரு உபாயம். எந்த சிங்கள பெரும்பான்மை அரசாங்கமும் எமக்கான நியாயமான உரித்துக்களைத் தரும் என்று நாம் நம்பவில்லை.  ஆனால் வெளிநாடுகளின் அழுத்தங்கள் தலையீடுகள் ஆகியன மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுக்களை பெறுவதன் மூலமோ அல்லது அரசாங்கத்துக்கு முண்டு கொடுப்பதன் மூலமோ இதனை சாதிக்க முடியாது.  அதேசமயம், வடகிழக்கில் மக்கள் தீர்ப்பை ஏற்படுத்துமாறு சர்வதேச நாடுகளுக்கு ஊடாக  கோருவதும் ஒரு வழிமுறை. இதனையும் நாம் மேற்கொள்ளுவோம்.  

கேள்வி:- உங்களது அணிக்கான அங்கீகாரம் கிடைக்கின்றபோது தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன்  இனப்பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகள் சார்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவீர்களா?

பதில்:- கட்டாயமாக அதைத்தானே எம்மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கின்றார்கள்? ஆனால் நாம் எவரிடமும் பிச்சைப் பாத்திரம் ஏந்தப் போவதில்லை. எமது உள்ளார்ந்த உரிமைகளின் அடிப்படையில் ஒன்றுக்கு ஒன்று, நேருக்கு நேர் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவோம். அவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது. எதுவும் கிடைக்காது என்பதெல்லாம் ஒரு பிழையான சிந்தனை. அவர்களின் அடிவருடிகளாக அவர்களிடம் இருந்து எதையும் பெறமுடியாது.

கேள்வி:- தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்த விடயங்களில் அடிப்படை கோட்பாடுகளை விட்டுக்கொடுக்கமுடியாது என்று கூறும் நீங்கள் அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் முன்வைத்துள்ளமையால் ஆட்சியாளர்களுடன் நெகிழ்வுப்போக்கொன்றுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுமல்லவா?

பதில்:- அவ்வாறில்லை, எமது பொருளாதார அபிவிருத்தியை அரசாங்கம் அனுமதிக்க வேண்டியது அதன் கடப்பாடு. அதில் இருந்து அரசாங்கம் தவறினால் நாம் எமது தற்சார்பு, தன்னிறைவு அடிப்படையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம். அதேவேளை, அரசாங்கத்தில் மட்டும் சார்ந்து இருக்காமல் எமது புலம்பெயர் உறவுகள், இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் உதவிகளையும் இதுவிடயத்தில் பெற்றுக்கொள்ள இருக்கின்றோம்.

கேள்வி:- உங்களுடைய தரப்பு உள்ளடங்கலாக ஒன்றிரண்டு ஆசனங்களுக்காக தேர்தலில் களமிறங்கியுள்ளதாக கூட்டமைப்பு கூறுவதோடு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பலத்தினையும் தமக்கு வழங்குமாறு கோரியுள்ளதே?

பதில் - கூட்டமைப்பு கனவு காண்கின்றது. இதுகாறும் மக்கள் மதித்து வந்த கூட்டமைப்பு தற்போது மரணப்படுக்கையில் இருக்கின்றது. ஒன்றிரண்டு ஆசனங்கள் என்று கூட்டமைப்பு குறிப்பிடுவது தங்களையே. இம்முறை அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம் கூட கிடைக்குமோ என்பது சந்தேகமே.

கேள்வி:- தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்கள் பிரிக்கப்பட்டால் பேரம்பேசும் சக்தி இழக்கப்படும் நிலையொன்று ஏற்படுமல்லவா?

பதில்:- கூட்டமைப்பின் பாராளுமன்ற பலம் 16ஆக இருக்கும் போது என்னவாறான பேரம் பேசப்பட்டது? இனியும் இவ்வாறான புழுகுகளுக்கு மக்கள் செவி சாய்க்க மாட்டார்கள். சக்தி அற்றவர்களின் பேரம் பேசும் பலம் பற்றி ஏற்கனவே கூட்டமைப்பு எமக்கு பறைசாற்றிவிட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் பிரதிநிதித்துவங்கள் இனிமேல் பாராளுமன்றத்தில் எவ்வாறு ஐக்கியப்பட்டு செயலாற்றலாம் என்று சிந்திக்க வேண்டிய கடப்பாடு இனி எழும்.

கேள்வி:- தேர்தல் பிரசாரத்திற்காக மக்களிடத்தில் நீங்கள் நிதிகோரியமை விமர்சிக்கப்படுகையில் உங்களுடைய தேர்தல் செலவுகள் உள்ளிட்ட நிதிக்கொடுக்கல் வாங்கல்களை பகிரங்கப்படுத்துவீர்களா?

பதில்:- கட்டாயமாக, மக்களிடம் இருந்து பெறப்படும் பணம் நம்பிக்கை சார்ந்தது. அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம். அதேவேளை, மக்களிடம் பணம் பெறுவதை விமர்சிப்பதில் என்ன இருக்கிறது? மக்கள் எமக்கு உதவுவதன் மூலம் நாம் மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்படுகின்றோம்.  

கேள்வி:- இறுதிப்போரில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்திவரும் நீங்கள், அதுதொடர்பில் அடுத்தகட்டமாக எவ்விதமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்:- விசாரணையை வலியுறுத்துவது தான் எமது தீர்வுக்கான ஒரேயொரு அடிப்படை. அதை முன்னெடுத்துச் செல்வோம். அதற்காகச் சட்டம், நியாயம், பொதுஜன கருத்துக்கள் போன்ற பலவற்றை நாம் பாயன்படுத்துவோம்.

கேள்வி:- தமிழர்களுக்கான தீர்வினை இந்தியா உள்ளிட்ட சர்வதேசம் பெற்றுத்தரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் சமகால பூகோளச் சூழலை வைத்துப்பார்க்கின்றபோது அதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்றதா?

பதில்:- கட்டாயமாக! சீன -இந்திய உறவுகள். இலங்கையின் இது வரையிலான கையாலாகாத வெளிநாட்டு மற்றும் பொருளாதார உறவு முறைகள் எமக்கு சாதகமாகவே இருக்கின்றன.

கேள்வி:- வட மாகாணசபை நிருவாகத்தின் தோல்விக்கு காரணமாக நீங்கள் அரசியல் அனுபவம், வயது, அரசியல் பார்வை போன்றன எதிர்கால அரசியல் தலைமையை வழங்குவதற்குப் பெருத்தமற்றவர் என்று முன்வைக்கப்படும் விமர்சனத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்:- எனது நிர்வாகம் தோல்வி அடைந்ததென்றால் எதற்காக இலங்கை முழுவதிலும் உள்ள 850க்கு மேற்பட்ட திணைக்களங்களில் எமது வடமாகாண முதலமைச்சர் அமைச்சையே முதலாவதாகத் தேர்ந்தெடுத்தார்கள்? நிர்வாகம் தோல்வியடைந்தது என்று கூறுவது என்னை வேண்டாதவர்கள். தமக்கு சுயநல நன்மைகளைத் தேடிக் கொள்வதற்காக. அதனால் அது உண்மையாகிவிடுமா? இதுவரையான அரசியல்த் தலைமை எதனை வெட்டிப் பிடுங்கிவிட்டது? புரிந்துணர்வு இல்லாதவர்கள், சுயநலமிகள் கூறும் கூற்றை வைத்து என்னிடம் கேள்விகளைக் கேட்காதீர்கள். எனது கட்சி பெயரளவில்த் தான் இருக்கும் என்றார்கள். அது ஒரு கட்சி மட்டுமே என்றார்கள். இன்று ஒரு கூட்டாக நாம் வளர்ந்துவிட்டோம். அதைக்கண்டு பொறாமைப்படுபவர்களின் பேச்சைப் பெரிதுபடுத்தாதீர்கள். அவர்கள் விரைவில் இருந்த இடம் தெரியாமல் மக்கள் மனதில் இருந்து மறைந்து விடப் போகின்றார்கள்.

கேள்வி:- ஒருவேளை, இந்தத்தேர்தலில் உங்களது அணிக்கான அங்கீகாரம் கணிசமாக இல்லாது விட்டால் அரசியலில் அடுத்த தடம் எவ்வாறிருக்கப்போகின்றது?

பதில்:- அரசியல் என்பது மக்களுக்கானது. மக்கள் சேவை தொடரும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04