(ஆர்.ராம்)

தமிழினத்தின் தலைசிறந்த மிதவாத தலைவர்களான தந்தை செல்வாவையும், அண்ணன் அமிர்தலிங்கத்தையும் தென்னிலங்கை சிங்களத்தலைவர்கள் ஏமாற்றியிருக்காது விட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்கவே மாட்டர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், அதன் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பிரிக்கமுடியாத, பிளவுபடுத்தப்படாத ஒருமித்த நாட்டிற்குள்ளேயே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சமஷ்டி தீர்வினை கோரி நிற்கின்றோம் என்பதை தென்னிலங்கை தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக இணைந்த வடக்கு கிழக்கில் பகிரப்பட்ட இறையாண்மையுடனான சமஷ்டி தீர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தென்னிலங்கையில் மிகக்கடுமையான எதிர்ப்பக்கள் கிளம்பியுள்ளதோடு, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுததத்தால் செய்யமுடியாது போனதை சம்பந்தன், பேனாவைப் பயன்படுத்தி சாதிக்கப் பார்க்கின்றார் என்றெல்லாம் விமர்சிக்கப்படுகின்றது. 

இப்பின்னணியிலேயே வீரகேசரி வாரவெளியிட்டுக்கு கருத்து வெளியிட்ட சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை பல்லினங்கள் வாழும் ஒரு நாடு. இந்த நாட்டில் 70வருடங்களாக இனப்பிரச்சினை தீர்க்கப்படாது நீடித்து வருகின்றது. தமிழினத்தின் மிதவாத தலைவர்களாக தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம் ஆகியோர் தென்னிலங்கை தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தி முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் தென்னிலங்கை தலைவர்கள் அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து ஏமாற்றினார்கள். 

இதற்குப்பின்னரான சூழலில், தீர்வொன்றைப் பெறுவதற்கான பலவிதமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஜே.ஆர்.காலத்தில் இந்திய, இலங்கை ஒப்பந்தம் கைச்சத்தாகி அரசியல் சாசனத்தில் 13ஆவது திருத்தம் செய்யப்பட்டு மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. பிரேமதாஸ காலத்தில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. பின்னர் மங்கள முனசிங்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சந்திரிகா காலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வுப்பொதி முன்னெடுக்கப்பட்டது. பின்னர் ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிப்பீடமேறியவுடன், 13பிளஸ் தருவதாக இந்தியாவுக்கும் எமக்கும் வாக்குறுதியளித்தார். தெரிவுக்குழுவொன்றை நியமித்தார். 18சுற்றுப் பேச்சுக்களை எம்முடன் நடத்தினார் 

இறுதியாக, மைத்திரி-ரணில் கூட்டாட்சியில் பெரும்பன்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய அரசியலமைப்புக்கான கருமங்கள் ஆரம்பிக்கப்பட்டு அது இடைக்கால அறிக்கைவரையில் சென்றடைந்துள்ளது. இவ்விதமான கருமங்கள் பல இனப்பிரச்சினை தொடர்பில் நிகழ்ந்திருக்கின்றன. அதுபற்றிய அனுபங்கள் எமக்குள்ளன. 

ஆகவே இனங்களுக்க இடையிலான பிரச்சினைகளை தீர்ப்பதாக இருந்தால் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். அவை மீளப் பெறாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்ய வேண்டும். அதற்கு நியாயமான தீர்வொன்று சமஷ்டி அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும். 

நாங்கள் நாட்டை பிரிக்கப்போவதில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டோம். எமது கூற்றையும் கோரிக்கையையும் நிராகரிக்காது நிதானமாக அமர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதனை தட்டிக்கழிக்க முடியாது. கடந்த காலங்களைப் போன்று எமக்கு மக்கள் இம்முறையும் பெரும்பான்மையான ஆணை வழங்குவார்கள். அதற்கு பதிலளித்தே ஆகவேண்டும். 

கடந்த காலத்தில் தந்தை செல்வாவையும், அண்ணன் அமிர்தலிங்கத்தையும் தென்னிலங்கை தலைவர்கள் ஏமாற்றியுள்ளார்கள். அதன் விளைவாகவே பிரபாகரன் ஆயுதமேந்தினார். அவ்வாறான நிலையொன்று ஏற்படாதிருந்திருந்தால் அவர் ஆயுதமேந்தியிருக்கவே மாட்டார் என்பதை இனியாவது தென்னிலங்கை தலைமைகள் உணரவேண்டும்.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்வின்றி இனியும் தொடரமுடியாது. நாடு அபிவிருத்தியில் முன்னேறுவது என்றால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டே ஆகவேண்டும். அதனை தவிர்த்து நாட்டை முன்னேற்ற முடியாது. பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது என்ற புரிதல் அவசியமானது என்றார்.