(நேர்காணல்:- ஆர்.ராம்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேரம் பேசவல்ல ஒருமித்த பிரதிநிதித்துவ அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்றும், ராஜபக்ஷவினருடன் அரசாங்கத்தின் பங்காளிகளாக இணைவதென்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- வடக்கு, கிழக்கு தேர்தல் களத்தில் உங்கள் மீது அதிக விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றனவே?

பதில்:- பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின்போது கட்சிக்கு வாக்களித்தல், வேட்பாளருக்கு வாக்களித்தல் என்ற இரண்டு விடயங்கள் காணப்படுகின்றன. ஆகவே, அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டியால் எனது கட்சியையும், வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியால் என்மீதும் விமர்சனங்களை முன்வைகின்றார்கள்.

 

கேள்வி:- வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை விடவும், கூட்டமைப்புக்குள்ளே குறிப்பாக உங்களுடைய கட்சிக்குள்ளேயிருந்தும் வெளிப்படுகின்றதே?

பதில்:- இதற்கு அடிப்படையில் காரணமாக இருப்பது தேர்தல் முறைமையாகும். அடுத்து வெளியில் உள்ள தரப்புக்கள் சம்பந்தன் ஐயாவையும், என்னையும் மையப்படுத்தி குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் ஊடாக ஒட்டுமொத்த கூட்டமைப்பையும் பாதிப்படையச்செய்து விடலாம் என்றே கருதுகின்றார்கள். அடுத்து கட்சிக்குள்ளிருந்து சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அல்லது விமர்சனங்கள் நான் அதிக வாக்குகளைப் பெற்றுவிடக்கூடாது, மாற்றமொன்று நிகழ்ந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் இருப்பது போன்றுதான் உணரமுடிகின்றது. இருப்பினும் முடிவு மக்கள் கையில்தான்.

 

கேள்வி:- இவ்வாறான நிலைமைகள் உங்களின் கள ரீதியான தேர்தல் செயற்பாடுகளுக்கு சவாலாக அமைக்கின்றதா?

பதில்:- இல்லை. இவ்விதமான நிலைமைகளால் நான் முக்கியமானவொரு வேட்பாளராக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படுகின்றேன்.

 

கேள்வி:- அடுத்து அமையவுள்ள ஆட்சியில் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கான பெரும்பான்மை பலத்தை வழங்குமாறு கோரினீர்களா?

பதில்:- நான் அவ்வாறு கூறவில்லை. என்னுடையை கருத்துக்கள் வழமை போன்றே திரிவுபடுத்தப்பட்டு விட்டன. எனது முழுமையான உரையைப் பிரசுரித்த ஊடகம் கூட கவர்ச்சியாக அவ்விதமான தலைப்பை இட்டிருந்தது.

 

கேள்வி:- அப்படியென்றால் 'அமைச்சுப் பதவிகள்' தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- நான் தேர்தல் பரப்புரைக்காகச் செல்கின்ற அனைத்து இடங்களிலும் சந்திக்கின்ற இளைஞர், யுவதிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏன் பெறக்கூடாது என்றே கேள்வி தொடுகின்றனர். அதற்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டின் அடிப்படையில், எமது கட்சியினால் எடுக்கப்பட்ட கொள்கை ரீதியான முடிவை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினேன். அதாவது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை என்ற கொள்கை ரீதியான முடிவை தமிழரசுக் கட்சி எடுத்துள்ளது. ஆதலால் நாம் அவ்வாறு அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியைப் பெறமுடியாது என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தினேன்.

 

கேள்வி:- ஆனால் நீங்கள் கொள்கை ரீதியான முடிவை மீளாய்வு செய்யவேண்டும் என்றும் கூறி வருகின்றீர்களே?

பதில்:- ஆம். நான் முன்னரே குறிப்பிட்டது போன்று அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சுப் பதவிகளைக் கூட்டமைப்பு ஏன் பெறக்கூடாது என்ற கேள்விகள் பலமாக மக்களிடத்திலிருந்து வருவதால் எமது கட்சியின் கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. கொள்கையை மீளாய்வு செய்வதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அடுத்த ஆட்சியில் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக அல்ல. அதேநேரம், கட்சியின் கொள்கை மீளாய்வு செய்யப்பட்டு அமைச்சுப் பதவியை எடுப்பதாக இருந்தாலும், எத்தனை அமைச்சுக்கள், எவ்விதமான அமைச்சுகள், அதிகாரங்கள் தொடர்பில் பேரம் பேசுவதற்காக கூட்டமைப்பின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை பலமாக இருக்க வேண்டும். மறுபக்கத்தில் கொள்கை மீளாய்வின் பின்னர் நாம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை என்று தீர்மானித்தாலும் எமக்குப்  பேரம் பேசுவதற்கான பலம் தேவை. ஆகவே, கட்சியின் தீர்மானம் எவ்வாறு அமைந்தாலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ பலம் ஓரணியில் அவசியமாகவுள்ளது என்றுதான் நான் கூறியிருந்தேன்.

 

கேள்வி:-அப்படியென்றால் அடுத்த ஆட்சியில் அரசாங்கத்தில் கூட்டமைப்பு அங்கம் வகிக்காது என்று உறுதியாகக் கூறுகின்றீர்ளா?

பதில்:- அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா? இல்லையா? என்ற கொள்கை மீளாய்வு செய்யப்பட வேண்டுமென்றே கூறுகின்றேன். உதாரணமாகக் கூறுவதாயின், 13ஆவது திருத்தத்தையும், மாகாண சபை முறைமையையும் ஏற்றுக்கொள்ளாததன் காரணமாக 1988ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு இணைந்து மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டபோது அதில் எமது கட்சி போட்டியிட்டிருக்கவில்லை. 19 வருடங்களின் பின்னர் 2007இல் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றபோதும் நாம் போட்டியிடவில்லை. ஆனால், முறையே 2012, 2013ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட கிழக்கு, வடக்கு மாகாண சபைகளுக்கான தேர்தலில் நாம் போட்டியிட்டிருந்தோம். இவ்வாறு போட்டியிடுகின்றபோது, கொள்கை மீளாய்வை கட்சி மேற்கொண்டிருக்கவில்லை. முக்கிய கொள்கையொன்றை நாம் மாற்றியபோது மக்களும் அது தொடர்பில் கேள்வி எழுப்பாது எமக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அப்படியிருக்கையில் காலத்துக்கேற்ற வகையில் தற்போது கொள்கையொன்றை மீளாய்வு செய்யுமாறே கூறுகின்றேன். மீளாய்வே செய்யக்கூடாதெனக்  கூக்குரலிடுவது அறிவிலித்தனமாகும்.

 

கேள்வி:- நீங்கள் கூறுவதைப் போன்று கொள்கை மீளாய்வு செய்யப்பட்டு அரசாங்கத்தில் இணையும் தீர்மானம் எடுக்கப்பட்டால், தமிழ் மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியுள்ள ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தில் இணையும் நிலையல்லவா ஏற்படும்?

பதில்:- ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததன் பின்னர் அவர்களின் போக்கு முற்றுமுழுதாக ஜனநாயக விரோதமாகவே உள்ளது. அவ்வாறான ஜனநாயக விரோத ஆட்சிக்கு நாம் ஒத்துழைப்பதோ அதில் பங்கேற்பதோ நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விடயம். அத்துடன் ராஜபக்ஷவினர் தமிழ் மக்களுக்கு பதிலளிக்க வேண்டியவர்களாகவும் உள்ளர்கள். மேலும் அரசாங்கத்துடன் இணைகின்றபோது பங்காளிகள் என்ற அடிப்படையில் எமக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. திருகோணேஸ்வரத்தையும், நல்லூரையும் பௌத்தமயப்படுத்த விளைகின்ற, சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்துகின்ற தற்போதைய ஆட்சியாளர்களை நாம் எவ்வாறு ஆதரிக்க முடியும்? ஆகவே, ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தில் இணையவே முடியாது.

 

கேள்வி:- யார் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாகக் கூறுகின்றீர்களே?

பதில்:- ஆம், ஆட்சியாளர்களுடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் எம்மைப் புறந்தள்ளிச் செல்லாதிருப்பதற்கு எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதற்கு எமக்கு பலமான அங்கீகாரத்தைத் தருமாறே நாம் கோருகின்றோம். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலேயே அந்தப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும். 

 

கேள்வி:- இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை, மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முடிவுற்றதாகக் கூறும் நீங்கள் உள்ளகப் பொறிமுறையை ஏற்க முடியாது என்று கூறுகின்றீர்களே?

பதில்:- இலங்கை விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணைகள் செய்யப்பட்டு அந்த முழுமையாக விசாரணை அறிக்கை 2015 செப்டெம்பர் 16ஆம் திகதி இளவரசர் செய்ட் ஹுசைனால் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் தற்போது நீதிமன்றப் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அந்த அறிக்கையிலும் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையும் உள்ளது. ஆகவே, விசாரணை நிறைவடைந்துவிட்டது. இந்தநிலையில் நீதிப்பொறிமுறை உருவாக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.