சுமார் ஒரு மாத காலமாக பங்களாதேஷின் வடக்குப் பகுதிளை வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் நாட்டில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாத இறுதியிலிருந்து பருவமழை ஆரம்பமானதிலிருந்து நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதனால் கடந்த 25 நாட்களில் தாழ்வான பகுதிகளில் சுமார் 9,500 பேர் நீரினால் பரவும் நோய்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு, பங்களாதேஷில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 

மேலும் வரும் நாட்களில் அதிக மழை மற்றும் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படுவதால் நிலைமைகள் மோசமடைய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், யுனிசெஃப் சுமார் 1.3 மில்லியன் சிறுவர்கள் உட்பட 2.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது, அரை மில்லியனுக்கும் அதிகமானோர்  (சுமார் 550,000குடும்பங்கள்) தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை பங்களாதேஷ் முழுவதும் தொடர்ந்தும் அதிகரித்து செல்கின்றது. அதன்படி தற்போது மொத்தமாக அங்கு 221,178 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 2,874 ஆக பதிவாகியுள்ளது.

Photo Credit : The Gurdian