நாட்டில் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வட கொரியாத் தலைவர் கிம்யொங் உன் அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை மத்திய கொரியா செய்தி நிறுவனம் (KCNA) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

வட கொரியா முன்னர் தனது நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எவரும் இல்லை என்று கூறி வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து சீனாவுக்கான போக்குவரத்தையும் வட கொரியா துண்டித்து விட்டதுடன், பல பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இந் நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குச் சென்ற ஒருவர், கடந்த ஜூலை 19 ஆம் திகதி சட்டவிரோதமாக வடகொரியாவின் வடக்கு எல்லை நகரமான கேய்சோங்கிற்குத் திரும்பிய பின்னர் "தீய (கொரோனா) வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது" என்று அந் நாட்டு அரச ஊடகமான 'KCNA' தெரிவித்துள்ளது.

கெய்சோங் வெள்ளிக்கிழமை முதல் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கொரோனா தொற்று சந்தேக நபருடன் நபருடன் தொடர்பு கொண்ட நபர்கள் மற்றும் கடந்த ஐந்து நாட்களில் நகரத்திலிருந்து பயணம் செய்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று நடைபெற்ற கொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் விரிவாக்கப்பட்ட அவசரக் கூட்டத்தில், கிம் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளை அதிகபட்ச மட்டத்தில் செயல்படுத்த உறுதியளித்தார்.