(செ.தேன்மொழி)

திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்கமைய, நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை, முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத ஆயுதங்கள், போதைப் பொருட்கள், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும், பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய  1,750 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 473 சந்தேக நபர்களுள் 301 சந்தேக நபர்கள்  ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 156 கிராம் 14  மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா போதைப் பொருளுடன் 163 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 47 கிலோ 628 கிராம் 62 மில்லிகிராம் கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடன் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடமிருந்து  42 கிராம் 165 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 4,115 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தமை தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 4 ரிபீடர் ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 276 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்ததாக 691 பேரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க, கடந்த வியாழக்கிழமை முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 1,750 சந்தேக நபர்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.