கல்வியிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும், பலவீனப்படுத்தப்பட்டிருக்கும்  தமிழச் சமூகத்தை பலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க இந்த தேர்தலில் யாழ் கிளிநொச்சி மக்கள் கேடயத்திற்கு வாக்களிக்க  வேண்டும் என கேடயச் சின்னத்தில் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

2010 தொடக்கம் 2015 வரையான காலத்தில்  யாழ் கிளிநொச்சி  மாவட்டங்களில் எனது செயற்பாடு குறித்து நான் மக்களுக்கு தெளிப்படுத்த தேவையில்லை. சொல்லை விட செயலையே இந்தக் காலத்தில் நான்  காட்டியிருகின்றேன். அதுவே நான் சுயேச்சைக் குழுவாக கடந்த உள்ளுராட்சி  தேர்தலில் போட்டியிட்ட  போது மக்கள்   எங்களுக்கு வழங்கிய பெரும்  ஆதரவாக இருந்தது. இதுவே இன்று இந்த பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலித்து வருகிறது.

எனவேதான் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தையும், பிரதேசங்களில் அபிவிருத்தியையும் வினைத்திறனுடன் கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதுவும் கடந்த ஐந்து வருடத்தில் விட்டப் பணியையும் சேர்த்தே உழைக்க வேண்டும். எமது இனத்தின் இருப்பையும் தேசியத்தையும் சிதையாமல் பாதகாக்க வேண்டுமானால் நாம் முதலில் பொருளாதார ரீதியாக பலம் பொருந்திய சமூகமாக இருக்க வேண்டும்.  எந்தவொரு இனம் அல்லது சமூகத்தின் பொருளாதாரம் சிதைக்கப்படுகிறதோ  அந்த இனத்தின் இருப்பும் சிதைக்கப்பட்டுவிடும்  இந்த அடிப்படையில்தான்  நாம் ஒரு இனத்தின் இருப்புக்கான அத்திபாரத்தை பலப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இதுவே இன்றைய எங்கள் இனத்தின் அவசியமான தேவையும் கூட எனத் தெரிவித்த  கடந்த 2015 தொடக்கம் 2020 வரையான காலத்தில் எமது மக்களுக்கு  எந்த விதமான பொருளாதார முன்னேற்றங்களும் ஏற்படவில்லை. வேலையின்மை வறுமை இதனால் ஏற்பட்ட விளைவுகளை மக்களை ஆக்கிரமித்து வைத்திருந்ததது. எனவே இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் இதற்காக வருகின்ற ஐந்து வருடங்களில் இரடிப்பு மடங்கு உழைக்க வேண்டும்  அதற்கான  அதிகாரத்தை  மக்கள் வழங்க வேண்டும்  எனவும் கேட்டுக்கொண்டார்.