எந்தவொரு நாட்டின் பெரும்பான்மை இனமும் சிறுபான்மை இனத்தின் இன மத அடையாளங்களை அழிக்க முற்படுகின்றதோ அன்றேல், அடக்கி ஒடுக்க முனைகின்றதோ அந்த நாடும் அந்தப் பெரும்பான்மை இனமும் இல்லாதொழியும் என்பதே வரலாறு.

அந்த வகையில் சிறுபான்மை மக்கள் குழுமங்களையும் அரவணைத்துச் செல்வதன் மூலமே அந்த நாட்டின் செழிப்பினையும் முன்னேற்றத்தையும் மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். அது மாத்திரமன்றி சர்வதேசத்தில் ஓர் அங்கீகாரத்தையும் பெறக்கூடியதாக இருக்கும். 

இந்நிலையில் சீனாவின் சில பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள சிலுவைகளை அகற்றவும் வீடுகளில் உள்ள இயேசு பிரானின் படங்களை நீக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதுமாத்திரமன்றி இயேசுபிரானின் படத்தை நீக்கிவிட்டு கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்களை வைக்குமாறும்  கோரப்பட்டுள்ளது. சீனாவின் குறிப்பாக மூன்று மாகாணங்களில் இவ்வாறு அதிகாரிகள் கிறிஸ்தவ மக்களிடம் கோரியுள்ளனர்.

இது சீனாவின் மற்றுமொரு கோர முகத்தையே உலகுக்கு காட்டுவதாக அமைந்துள்ளது. ஏற்கனவே  கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை உலக நாடுகள் வெறுப்புடனே பார்த்து வருகின்றன. 

அதுமாத்திரமன்றி உலகம் முழுவதும் குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் செறிந்துவாழும் ஐரோப்பிய நாடுகளிலும் சீனர்கள் சிறு குழுமங்களாக வாழ்ந்து வருகின்றனர்.  

குறித்த அந்த நாடுகளில் சீன மக்களுக்கு எதிராக எந்தவிதமான வெறுப்புணர்வைக் காட்டவோ அன்றேல் அவர்கள் தங்கள் சமயத்தை அல்லது அதன் அடையாளச் சின்னங்களை பின்பற்றக் கூடாது  என்று கூறவோ இல்லை. அத்துடன் சீனர்களைப் பார்த்து முகம் சுளிக்கவும் இல்லை.

‌நிலைமை இவ்வாறு இருக்க சீனாவின் மூன்று மாகாணங்களில் கிறிஸ்தவ மக்களை அடக்கி ஒடுக்கும் வகையிலும் குறிப்பாக அவர்களின் மதத்தை   மலினப்படுத்தும்  வகையிலும் சீன அதிகாரிகள் கூறியிருப்பது மிகவும் பிற்போக்குத்தனமானது.

 

உலகின் பழமையான மதங்களில் ஒன்றும் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படுவதுமான கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக சீனாவின் மூன்று மாகாணங்களில் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஒட்டு மொத்தமாக முழு  நாட்டுக்குமே தலைகுனிவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்