( எம்.எப்.எம்.பஸீர்)

கொலை, கொள்ளை, கப்பம் கோரல் உள்ளிட்ட பல திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, பிரபல பாதாள உலகத் தலைவன்  அங்கொட லொக்கா என அறியப்படும் மத்துமகே லசந்த சமிந்த பெரேரா, இந்தியாவில்  நஞ்சூட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலின் உண்மைத் தண்மையை அறிவியல் ரீதியாக உறுதி செய்துகொள்ள விஷேட விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

அங்கொட லொக்கா உயிரிழந்தமை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எமக்கு கிடைக்கவில்லை. அவர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படுமிடத்து அது தொடர்பில், அவருக்கு எதிரான நீதிமன்றங்களுக்கு அதனை அறிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

சில நேரம் அவர் அவரது உருவத்தை மாற்றி மீள இலங்கைக்கு வந்து குற்றங்களில் ஈடுபடவோ, அல்லது  வெளிநாடொன்றுக்கு பாதுகாப்பாக சென்று மறைந்திருக்கவோ கூட,  தான் மரணித்துவிட்டதாக நம்பவைக்க நாடகம் ஆடுகின்றாரா என்ற சந்தேகமும் உள்ளது.

அது குறித்தும் அவதானம் செலுத்தி  சிறப்பு விசாரணை செய்கின்றோம்.' என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

மிரிஹானையில் உள்ள மேல் மாகாண தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் வீரகேசரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்தார்.  

அங்கொட லொக்கா உண்மையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளாரா அவர் உயிரிழந்துவிட்டாரா என்பதை அறிவியல் ரீதியில் ஆதாரபூர்வமாக உறுதி செய்ய 2002 ஆம் ஆண்டில் 25 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர தகவல் பரிமாற்றுச் சட்டத்தின் கீழ் இந்தியாவிடம் உதவியைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 ‘அங்கொட லொக்கா’ என்றழைக்கப்படும் பாதாள உலகக்குழு தலைவரான லசந்த பெரேரா இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக வௌியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

கைதுசெய்யப்பட வேண்டியவரான அங்கொட லொக்கா எனப்படும் குறித்த சந்தேக நபர் வௌிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகவே எம்மிடம் தகவல் உள்ளது.

 குறித்த சந்தேகநபர் தொடர்புடைய பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல் பரவியுள்ளமை தொடர்பில் சட்டரீதியில் அறிவியல் ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இதுவரை இலங்கை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வ தகவலை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் உறுதிப்படுத்த முடிந்தால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.' என இதன்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, கடந்த 3 ஆம் திகதி இந்தியாவின் பெங்களூர் பகுதி தனியார் மருத்துவமனை ஒன்றில் அங்கொட லொக்கா உயிரிழந்ததாகவும், அவரது  உடல் தமிழ் நாடு, கோயம்புத்தூர் பகுதியில்  தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் நம்பகரமான உள்ளக தகவல்கள் ஊடாக அறிய முடிந்தது.

கடந்த 2017 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான சமயங் உள்ளிட்ட சில கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அதன் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் அங்கொட லொக்கா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந் நிலையிலேயே இந்தியாவில் அங்கொட லொக்கா மறைந்திருந்த நிலையில், இலங்கையில் இருந்து அங்கு சென்று அங்கொட லொக்காவுடன் இருந்ததாக கூறப்படும்  அழகுக் கலை நிலைய பெண் ஒருவர் இவ்வாறு சக்தி பானம் ஒன்றில் விஷம் கலந்து அங்கொட லொக்காவை கொலை செய்துள்ளதாக அந்த  தகவல்கள் தெரிவித்தன. 

இந்த விஷம் கலந்த பானத்தை அருந்தி அங்கொட லொக்கா வைத்தியசாலையிலும் சுமார் ஒரு வாரம் வரை இருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவரது இறுதிக் கிரியைகள் கூட அங்கேயே இடம்பெற்றுள்ளதாகவும் அது வீடியோ வடிவில் கம்பஹாவில் உள்ள அவரது சகோதரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள்  சுட்டிக்காட்டியிருந்தன.

முல்லேரியாவே ரத்தரங் எனும் பாதாள உலக உறுப்பினர் கொலைக்கு பழி தீர்க்கவே, அவரது மனைவியான குறித்த பெண் அங்கொட லொக்காவுடன் கள்ளக்காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறான பின்னணியிலேயே, அந்த தகவல்கள் பிரகாரம் உண்மையிலேயே அங்கொட லொக்கா உயிரிழந்துவிட்டாரா என்பதை அறிவியல் ரீதியாக உறுதி செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.