( க.பிரசன்னா )

உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் பேசும் இளைஞர்கள், யுவதிகளிடம் இயல், இசை, நாடகத்தின் மூலம் ஒற்றுமையையும் இணைப்பையும் உருவாக்கும் நோக்கில் 'திகடசக்ர'  அமைப்பு இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு மிக நீண்டகாலமாக இருந்தாலும் வெளித்தெரியாமல் இருந்தது. கொரோனாகால இடைவெளியில் ஏற்பட்ட யோசனையின் அடிப்படையில் இணையம் மூலமான விவாதப் போட்டியொன்றை ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக 'திகடசக்ர' அமைப்பினர் தெரிவிக்கின்றனர். 

அதை எவ்வாறு இணையத்தின் மூலம் செயற்படுத்துவதென்பதிலேயே சிக்கல் தோன்றிய நிலையில் இணையத்தளம் ஒன்றினை கண்டுபிடித்து மே மாதம் 2 ஆம் திகதி 'சூழலும் சொற்போர்' என்ற 6 பேர் கொண்ட விவாதப் போட்டியினை நடத்தியிருந்தோம். இதனை பொழுதுபோக்காக ஆரம்பித்து இன்று ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு பகுதியென 12 பகுதிகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

அத்துடன் ஏதோவொரு துறையில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இரு ஆளுமைகளைக் கொண்டு பேச்சு நிகழ்ச்சியொன்றை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 'இஞ்சி டிவி இனாதனா' என்ற பெயரில் அந்நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. அதில் 10 பகுதிகள் நிறைவடைந்துள்ளன. 'கிணத்தடி' என்ற நிகழ்ச்சி விவாதப் போட்டியாகவும் 'இஞ்சி டிவி இனாதனா' என்ற நிகழ்ச்சி ஆளுமைகளின் பேச்சு நிகழ்ச்சியாகவும் அமைந்திருக்கின்றது.

பின்னர் இசைக்காகவும் ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் இலங்கையைச் சேர்ந்த பாடக்கூடிய இளைஞர், யுவதிகளைச் சேர்த்து இசை நிகழ்ச்சி யொன்று 'திண்ணை' என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. எனவே இயல், இசையை தொடர்ந்து நாடகம் தொடர்பாக நிகழ்ச்சியொன்றை ஆரம்பிக்கும் நோக்கில் 'திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு' என்ற பெயரில் பிரசித்தி பெற்றிருக்காத பக்தி இலக்கியமொன்றை தேர்ந்தெடுத்து விளக்கங்களை கொடுப்பதுடன், அப்பக்தி பாடல்களுக்கு இசையமைத்து அதற்கொரு நடனத்தையும் இயற்றி காட்சிப்படுத்துகின்றோம்.

இதன் பின்னணியிலேயே உலகிலுள்ள தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளை உள்வாங்கி 'வித்தக தமிழ் வேள்வி' என்ற விவாத போட்டியொன்றை அறிமுகம் செய்திருக்கின்றோம். முதலாவது போட்டியில் இலங்கை, இந்தியா, மலேஷியா, அவுஸ்திரேலியா நாடுகள் போட்டியிடுகின்றன. இந்நான்கு நாடுகளையும் சேர்ந்த 12 இளைஞர்கள் போட்டியிடவுள்ளனர். இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் முதலாம் திகதி தொடங்கப்படும். ஒவ்வொரு நாட்டு அணியும் மற்ற நாட்டு அணிகளை சந்திக்கும். அப்போட்டிகளில் அதிக புள்ளிகளை பெறும் முதல் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்படும். இதில் ஒரு அணி வெற்றிபெறும். வெற்றிபெறும் அணிக்கு நாங்கள் எவ்வித பரிசுகளையும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்ச்சியின் நோக்கம் போட்டி நிறைவடைந்தவுடன் நான்கு நாடுகளையும் சேர்ந்த 12 பேரும் தங்களுக்குள் இணைந்து ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொள்ளப் போகின்றனர். இதனால் சர்வதேச இளைஞர்கள் மத்தியில் ஒரு இணைப்பொன்று உருவாக்கப்படும். இதுவே எங்களுடைய நீண்டகால நோக்கமாகும்.