(செ.தேன்மொழி)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் பயனில்லாத போது இனவாதத்தையே இறுதியில் கையில் எடுத்து செயற்படுவார் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்க தலைவர் சமீர பெரேரா, தங்களது தரப்பினரின் தவறை மறைப்பதற்காக 2 ஆம் புவனேகபாகு மன்னனுக்கே நடத்தை சான்றிதழை வழங்கியுள்ள ராஜபக்ஷக்கள் , தங்களுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் தேரர்களுக்கும் நடத்தை சான்றிதழை வழங்க தாமதிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

எப்போதுமே கதிரைகள் மீது மோகம் கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிரதமர் கதிரை மீதான மோகம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு கதிரைகள் தொடர்பில்  கவனம் செலுத்தி வரும் இவர் இறுதியில் எந்த கதிரையில் செல்லவேண்டி ஏற்படுமோ தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கூறியதாவது, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் புகைப்படத்தை பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ள முத்திரையை அவர் தற்போது பயன்படுத்தி வருகின்றார். இதற்கு யார் அவருக்கு அனுமதி பெற்றுக் கொடுத்தது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுப்படுத்த வேண்டும். நாட்டின் அடிப்படை ஒழுக்க விதிகள் மீற பட்டுள்ளதாக வீரவன்ச தெரிவித்துள்ளார். குடிவரவு குடியகழ்வு சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டுள்ள இவர்கள் தான் இன்று நாட்டின் ஒழுக்க விதி தொடர்பில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டியவர்கள்.

புராதன சிறப்புரிமை மிக்க கட்டடத்தை இடித்தமை தொடர்பில் நடவடிக்கை  எடுக்காமல் , தமது தரப்பினரை பாதுகாப்பதற்காக கட்டடத்தின் உரிமையாளரான 2 ஆம் புவனேக பாகு மன்னனுக்கு நடத்தை சான்றிதழை வழங்கியுள்ளார்கள். இதனால் ஆளும் தரப்பினரின் வெற்றிக்காக செயற்பட்ட தேரர்களே இன்று இரர்களுக்கு எதிராக பேசி வருகின்றனர். தேரர்கள் இவர்களை எதிர்க்கும் போது மிக கவனமாகவே செயற்பட வேண்டும். ஏன் என்றால் தங்களுக்கு எதிராக செயற்படுபவர்களின் நடத்தை தொடர்பில் ஆராய்ந்து சான்றிதழை வழங்கும் குணம் கொண்டவர்கள் இவர்கள்.