( எம்.எப்.எம்.பஸீர்)

குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் அமைந்துள்ள அரசவை கட்டிடம் என கருதப்படும்  புவனேக ஹோட்டல் நடத்திச் செல்லப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்  கையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலான பொலிஸ் விசாரணைகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி விசாரணைகளை முன்னெடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் திஸாநாயக்க, குருணாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், குருணாகல் வலய குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள்,  தேசிய கட்டிட ஆய்வு மைய அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் நேற்று முன்தினமும் சட்ட மா அதிபருடன்  இந்த தொல்பொருள் கட்டிட தகர்ப்பு விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடல் முடிவிலேயே, இந்த விடயம் தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டிய முறைமை,  அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விஷேட அலோசனை சட்ட மா அதிபரால்  பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் 5 பக்கங்களைக் கொண்ட விஷேட வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை சட்ட மா அதிபரால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

அதன்படி குற்றம் இடம்பெற்றுள்ள இடத்தின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளல்,  தொள்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம், தேசிய கட்டிட ஆய்வு மைய பணிப்பாளர் நாயகம் அகியோரின் விஷேட நிபுணத்துவ பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள தேவையான நீதிமன்ற உத்தரவுகளைப் பெறல்,  சட்ட மா அதிபர் கொடுத்துள்ள ஆலோசனைப் பிரகாரம் குருணாகல் மாநகர சபையின் தலைவர், அதன் உறுப்பினர்கள்,  அங்குள்ள சில அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார அபையின் அதிகாரிகளிடம் வாக்கு மூலம் பெறல் போன்ற விடயங்களை முன்னெடுக்க சட்ட மா அதிபர் பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவையனைத்தையும் முன்னெடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் விசாரணை அறிக்கையை தமக்கு கையளிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.